

தெற்கு டெல்லியில் ஓடும் காரில் வைத்து தன்னை 3 பேர் பலாத்காரம் செய்ததாக 25 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்திருப்பதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹமிர்பூரில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து சார்பு ஆய்வாளர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவனின் நிலை குறித்து அறிய காவல் நிலையத்துக்கு கடந்த 9-ம் தேதி இரவு சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக டி.ஐ.ஜி. அமிதாப் யாஷ் வியாழக்கிழமை கூறும்போது, “புகார் தெரிவித்த பெண், பலாத்காரத்துக்கு உள்ளானாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அந்த பெண்ணுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அவர் மூன்றரை மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் தெரியவந்தது. பலாத்காரம் நிகழ்ந்திருக்குமா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
மற்றொரு சம்பவத்தில், மொராதாபாதில் 19 வயது இளம்பெண், மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் இறந்து கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், அந்த பெண் தற்கொலை செய்து உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அந்த நகரத்தின் சோலா பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் அந்த சிறுமியின் தந்தை, கடந்த புதன்கிழமை காலை 10 மணி முதல் தனது மகளை காணவில்லை என புகார் தெரிவித்திருந்தார். அந்த சிறுமியை 17 வயதுடைய சிறுவனுடன் பார்த்ததாக சிலர் கூறியதைத் தொடர்ந்து, அவனை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.