Published : 04 Apr 2016 02:14 PM
Last Updated : 04 Apr 2016 02:14 PM

காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்றார்

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக-பிடிபி கட்சிகளிடையே இருந்த கூட்டணி இழுபறி நிலைமைகள் முடிவுக்கு வந்ததையடுத்து அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி திங்களன்று பதவியேற்றார்.

ஜம்மு காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி பொறுப்பேற்றது. இதில் பிடிபியின் முப்தி முகமது சையது முதல்வராகவும், பாஜகவின் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் முப்தி முகமது சையது உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்தார்.

தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன், முப்தியின் மகள் மெகபூபா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் பிடிபி - பாஜக கூட்டணி அரசு அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி இன்று காலை 11.00 மணி அளவில் பதவியேற்றுக் கொண்டார். மேலும் அசாமின் சைதா அன்வாரா தைமூருக்கு அடுத்தபடியாக முதல்வராக பதவியேற்கும் நாட்டின் இரண்டாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையும் மெகபூபா வுக்கு கிடைத்துள்ளது.

மெகபூபா முப்தியுடன் 23 அமைச்சர்களும் பதவியேற்றனர். மெகபூபா முப்தி சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர். இவர் 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் மூலம் மையநீரோட்ட அரசியலுக்குள் நுழைந்தார். இந்தக் காலக்கட்டத்தில் தீவிரவாதம் காஷ்மீர் மாநிலத்தில் உச்சத்தில் இருந்தது.

மக்களுடன் நேரடியான தொடர்பிலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும் இவர் மக்கள் ஜனநாயகக் கட்சியை எடுத்துச் சென்றதில் அவரது தந்தை முப்தியையும் இவர் கடந்து விட்டதாக பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x