

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி மக்களவைக்கு இன்று வந்தபோது 5 மாநில தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக எம்.பி.க்கள் பலத்த கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்படுகிறது. முதல் அமர்வு ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும் அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிப்ரவரி 11-ம் தேதி முடிவடைந்தது.
அதன்பின் ஒரு மாதத்துக்குப்பின் 2-வது அமர்வு மார்ச் 14-ம் தேதியான இன்று தொடங்கியது. இந்த அமர்வு ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 மாநிலத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி வரை நடைபெற்றதால் 2-வது அமர்வு ஒரு மாத கால தாமதமாக நடத்தப்படுகிறது.
5 மாநிலத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து 2-வது அமர்வு இன்று தொடங்கியதால் ஆளும் கட்சி எம்.பி.க்கள் உற்சாகத்துடன் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். பிரதமர் மோடி மக்களவைக்கு இன்று வந்த நிலையில் 5 மாநில தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதால் அக்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.
மோடி மோடி என அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். பின்னர் வழக்கமான அவை நடவடிக்கைகள் தொடங்கின.
மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கரோனா பரவல் இருப்பதால், எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசியும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன்தான் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடந்த அமர்வுகளில் இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்காமல் தனித்தனி ஷிப்டகளில் நடக்கும்போது நாடாளுமன்றத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. தற்போது இரு அவைகளும் ஒன்றாக நடக்க வேண்டியிருப்பதால் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.