Published : 14 Mar 2022 06:59 AM
Last Updated : 14 Mar 2022 06:59 AM

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார்: 5 மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு 4 மணி நேரம் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தியுடன் உரையாடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. படம்:பிடிஐ.

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார்என்று கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தோல்வி குறித்து ஆராய வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆஸாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா,கே.சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட5 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யாரும் செல்போன் எடுத்துவரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

செயற்குழு கூட்டத்துக்கு முன்னதாக ராஜஸ்தான் முதல்வர்அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ராகுல்காந்தியால்தான் பாசிச கட்சிகளையும் பிரதமர் மோடியையும் எதிர்க்கமுடியும் என்பதால், அவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். பஞ்சாப் பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு உட்கட்சி பிரச்சினைதான் காரணம்” என்றார்.

இதற்கிடையே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பொறுப்புகளில் இருந்து சோனியா, ராகுல்,பிரியங்கா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மறுத்தனர்.

செயற்குழுக் கூட்டம் காரணமாக டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொண்டர்கள் கட்சி தலைமையகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, செயற்குழு கூட்டம் நடைபெற்ற கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே குவிந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

சுமார் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முழுவிவரங்களை அறிக்கை வாயிலாககாங்கிரஸ் கட்சி வெளியிடவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனிடையே கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார். எங்களை அவர் வழிநடத்திச் செல்வார். கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்துவிவாதிக்கப்பட்டன. கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பான முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார்" என்றார்.

மேலும், 2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x