Published : 30 Apr 2016 12:55 PM
Last Updated : 30 Apr 2016 12:55 PM

ஜெய்ப்பூர் அரசு காப்பகத்தில் 10 நாட்களில் 11 பேர் பலி: அலட்சியத்தால் விபரீதமா?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு காப்பகத்தில் கடந்த 10 நாட்களில் 11 பேர் பலியான் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 18-ல் இருந்து 28-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர்.

தரமற்ற குடிநீர், உணவு காரணமாகவே இவர்கள் அனைவரும் பலியாகியிருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 குழந்தைகள் ஆபத்தான நிலையில் ஜே.கே.லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு ராஜஸ்தான் அரசு சுகாதார துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கெடு அளித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஜே.கே.லோன் மருத்துவமனையின் எஸ்.பி. அசோக் குப்தா கூறும்போது, "வாந்தி, பேதி பாதிப்புக்காக ஜம்டோலியில் உள்ள அரசு காப்பகத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்தபோது அவர்களுடைய ரத்தத்தில் விஷத்தன்மை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கெட்டுப்போன உணவையோ அல்லது கடுமையாக பாழ்பட்ட குடிநீரையோ அருந்தியிருக்க வேண்டும்" என்றார்.

அமைச்சர் மறுப்பு:

ஆனால், ராஜஸ்தான் மாநில சமூக நீதித் துறை அமைச்சர் அருண் சதுர்வேதி இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். முதற்கட்ட தகவலின்படி ஏதோ கிருமி தொற்றே காப்பகத்திலிருந்தவர்கள் மரணத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் இன்னும் வரவில்லை" என்றார்.

3 பேர் குழு:

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சமூக நீதித் துறையின் முதன்மைச் செயலர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அரசு காப்பகத்தில் சுகாதாரமற்ற குடிநீர் குடித்ததாலேயே இந்த இறப்புகள் நேர்ந்திருக்கிறது என்றால். அரசு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x