Last Updated : 26 Apr, 2016 10:08 AM

 

Published : 26 Apr 2016 10:08 AM
Last Updated : 26 Apr 2016 10:08 AM

சுந்தரவன தீவுகளுக்கு படகுகளில் பயணம் செய்த 1000 அலுவலர்கள்

மேற்குவங்க மாநிலம் சுந்தரவனக் காடுகள் பகுதியில் உள்ள தீவுகளுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்குப் பதிவுக்கு தேவைப்படும் பொருட்களுடன் 50 படகுகளில் சென்றனர்.

மேற்குவங்க மாநிலத்தில் ஹவுரா மற்றும் வடக்கு 24 பர்கா னாஸ் மாவட்டங்களுக்கு உட்பட்ட 49 தொகுதிகளுக்கு நேற்று 4-வது கட்ட தேர்தல் நடந்தது. இதில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத் தில் உள்ள சந்தேஷ்காளி, ஹின்கல் கஞ்ச் பகுதிகள் சுந்தரவனக் காடுகள் உள்ள குட்டித் தீவுகளில் அமைந் துள்ளன. இந்திய - வங்கதேச எல்லையில் இந்த காடு உள்ளது.

மேற்குவங்க சுந்தரவனக் காடு, 54 குட்டி தீவுகள் அடங்கியது. அலையாத்தி (மாங்குரோவ்) மரங்கள் நிறைந்த அடர்ந்த அழகிய காடு. இதன் தீவுப் பகுதிகளில் 44 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த பகுதிகளில் பல தடைகளை கடந்து வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

அதன்படி, 4-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு பொருட்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் 50 படகுகளுடன் சென்றனர். சந்தேஷ்காளி, ஹின்கல்கஞ்ச் பகுதிகளுக்கு அலுவலர்கள் சென்று வாக்குச் சாவடிகளில் ஏற்பாடுகளை துரிதமாக செய்தனர். இந்த 2 தீவுகளிலும் 170 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் தேர்தல் அலுவலர்கள் பல சிரமங்களை தாண்டி இந்த தீவுகளுக்கு சென்றடைந்தனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்போன் சேவை இல்லாததால், தகவல் தொடர்புக்காக இத்தீவு களின் 7 இடங்களில் ஹாம் ரேடியோ வசதியும் செய்யப்பட்டது. இதன் மூலம் 170 சாவடிகளில் வாக்குப் பதிவு நிலவரம் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பரிமாறப்பட்டது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x