Published : 13 Mar 2022 07:06 AM
Last Updated : 13 Mar 2022 07:06 AM
உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 97% பேரும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 72 சதவீதம் பேரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
உத்தர பிரதேச பேரவை தேர் தலில் பாஜக வெற்றி பெற்றுமீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இங்கு மொத்தமுள்ள 403தொகுதிகளில் பாஜக 255, சமாஜ்வாதி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 2, பகுஜன் சமாஜ் 1 இடத்தில் மட்டுமே வென்றுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட காங்கிரஸ் 2.4% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 33 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய லோக்தளத்தின் (ஆர்எல்டி) 2.9 சதவீதத்தை விட குறைவாகும். மேலும் காங்கிரஸ் கட்சியின் 97% வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
இதுபோல 403 இடங்களிலும் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் 290 இடங்களில் டெபாசிட் இழந்தது. அதாவது 72% வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
அதிக வெற்றி பெற்ற கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன. 376 இடங்களில் போட்டியிட்ட பாஜக 3 இடங்களிலும் 347 இடங்களில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 6 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளன.
பாஜக 3 இடங்களில் டெபாசிட் இழந்தாலும் அதன் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் (சோனிலால்),நிஷாத் கட்சி ஆகியவை தாங்கள் போட்டியிட்ட 27 தொகுதிகளில் ஒன்றில் கூட டெபாசிட் இழக்கவில்லை.
சமாஜ்வாதி கூட்டணியில் ஆர்எல்டி 33 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் டெபாசிட் இழந்தது. எஸ்பிஎஸ்பி, அப்னா தளம் ஆகியவை 25 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் டெபாசிட் இழந்தன.
செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 6-ல் 1 பங்குக்கு குறைவாகபெறும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகை இழப்பார்கள். உ.பி.யில் 3,522 (80%) வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT