

மேற்குவங்க மாநிலத்தில் இன்று நடக்கவுள்ள 5-ம் கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்பதால் தேர்தல் நடக்கும் மூன்று மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்புக்காக மத்திய படையினர் 90 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்தநிலையில், இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெற்கு 24 பர்கானாஸ், கொல்கத்தா தெற்கு மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் உள்ள 53 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக 14,500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.2 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
இந்த வாக்குப்பதிவின் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்வதற் கான சந்தர்ப்பங்கள் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப் படுத்தும் நோக்கில் மத்திய படையினர் 90 ஆயிரம் பேரும், மாநில போலீஸாரும் குவிக் கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் நடக்கும் மூன்று மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் பிற மாநிலங்களில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் கண்காணிப் பாளர்களும் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
பதற்றமானவையாக கண்டறி யப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. இதே போல் வன்முறையை தூண்டுபவர்கள் என கண்டறியப் பட்ட 3 ஆயிரம் பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் தீபா தாஸ் முன்ஷி, பாஜக சார்பில் சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திரகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் பவானிப்பூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 43 பெண்கள் உள்பட 349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வெடிகுண்டுகள் பறிமுதல்
மேற்குவங்கத்தில் 5-வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கவுள்ள நிலையில் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள டில்ஜலா என்ற இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் நேற்று கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ஒரு வீட்டின் மாடிப்படிக்கு கீழே ஒரு பைக்குள் இந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது தொடர் பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் நடக்க வுள்ள நிலையில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.