

பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய விவகாரங்கள் குறித்த விசாரணையிலிருந்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விலகியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பெயர் அடிபடும் ‘ஸ்போர்ட்ஸ் புரோமோட்டர்’ லோகேஷ் சர்மா என்பவருக்கு ‘பாஜக தலைவர்களுடன் இருக்கும் நெருக்கம்’ காரணமாக அருண் ஜேட்லி இந்த விசாரணை நடைமுறைகளிலிருந்து விலகியிருப்பதுதான் நியாயம் என்கிறது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்.
மேலும் வரிப்புகலிடங்களாக பனாமாவில் நிறுவனங்களைத் தொடங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிடவும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “பனாமா பேப்பர்ஸ் அம்பலத்தில் அடிபடும் இந்திய பிரபலங்கள் பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிந்த நண்பர்கள், அவரது நன்மையை விரும்புவர்கள், மற்றும் பிரதமரின் தூதர்கள், எனவே, உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழான விசாரணையே பாரபட்சமற்றதாக இருக்க முடியும்” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, அக்டோபர் 14, 2000-ம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் சங்கம், சர்வதேச போட்டிகளின் போது ஸ்டேடியத்துக்குள் விளம்பரங்களுக்காக 21st Century Media என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகால ஒப்பந்தம் மேற்கொள்ள காய் நகர்த்தியுள்ளது, இந்த நிறுவனம் பனாமா பேப்பர்ஸ் கசிவில் பெயர் வெளியான லோகேஷ் சர்மாவுடையது என்றார்.
ஆம் ஆத்மியின் அஷுடோஷ் கூறும்போது, “ஒரு நிதியமைச்சர் என்ற அதிகாரத்தில் அருண் ஜேட்லியின் அனைத்து விசாரணை அமைப்புகளும் இயங்கி வருகிறது. இதனால் லோகேஷ் சர்மா உள்ளடங்கிய இந்த விவகாரத்தில் எப்படி நேர்மையான விசாரணை நடைபெறும்? அவர் ராஜினாமா செய்து விட்டு லோகேஷ் சர்மாவுடனான தனது உறவுகளை அவர் விளக்க வேண்டும்” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக, இந்தியாவில் கருப்புப் பணம் பெருக ‘காங்கிரஸ் கட்சி மட்டுமே பொறுப்புடையது’ என்று சாடியுள்ளது.