Published : 12 Mar 2022 06:24 AM
Last Updated : 12 Mar 2022 06:24 AM

இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானிகள் பயிற்சி விமானம்: ஹன்சா-என்.ஜி.யின் கடல் மட்ட சோதனை வெற்றி

விமானிகள் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஹன்சா-என்.ஜி நவீன பயிற்சி விமானத்தின் கடல் மட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஆய்வுக்கூடங்களில் ஒன்று பெங்களூருவிலுள்ள தேசிய விமானவியல் ஆய்வகம் (என்ஏஎல்). இந்த ஆய்வகம், விமானி பயிற்சிக்காக ஹன்சா என்ற இரு நபர் விமானத்தை 1993-ல் உருவாக்கியது.

மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டபுதிய தலைமுறை ஹன்சா - என்.ஜி (New Generation) என்ற அடையாளத்தோடு செப்.2021-ல் முதன்முதலாக பறக்க விடப்பட்டது. ஆராய்ச்சி நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்குச் செல்ல பல விதமான விமான சோதனைகள் செய்யப்படும். சமீபத்தில் நடந்த கடல் மட்ட சோதனைகளில் ஹன்சா-என்.ஜி வெற்றி பெற்றுள் ளது. இதுகுறித்து அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஹன்சா-என்.ஜி விமானத்தின் கடல்மட்ட சோதனைகள் புதுச்சேரியில் நடைபெற்றன. மணிக்கு 155 கி.மீ வேகத்தில் பறந்த விமானம் பெங்களூருவிலிருந்து புதுச்சேரி வரை உள்ள 140 கடல் மைல் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்தது.

இதுவரை 37 முறை சோதனை

பிப்.19 முதல் மார்ச் 5 வரை கடல் மட்ட சோதனைகளில் இந்த விமானம் 18 மணி நேரம்ஈடுபடுத்தப்பட்டது. விமானத்தின் பல்வேறுசெயல்பாடுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனைகளுடன் இதுவரை விமானம் 37 முறை பறக்க விடப்பட்டு 50 மணி நேரம் சோதிக்கப்பட்டது. இன்னும் சில சோதனைகளுக்கு பிறகு சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் அனுமதி பெறப்படும். விமானம் உற்பத்தி நிலைக்குச் செல்ல கடல்மட்ட சோதனையின் வெற்றி ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

ஹன்சா-என்.ஜி விமானத்தில் பல புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு தயாரிப்பாகவும் எரிபொருள் சிக்கனமும் உள்ளதால் விமான பயிற்சி பள்ளிகளுக்கு ஏற்ற விமானமாக இது இருக்கும். இந்த விமானத்தை வாங்குவதற்கு இதுவரை 80 விமான பயிற்சி பள்ளிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

விஞ்ஞானி வி.டில்லிபாபு கருத்து

இதுகுறித்து விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறும்போது, ‘‘இந்த விமானம் உற்பத்தி நிலைக்கு வரும்போது புதிய வாய்ப்புகளை தொழில்துறையிலும், பொறியியல், தொழில்நுட்பக் கல்வி மாணவர்களுக்கும் உருவாக்கும். பிற துறைகளைவிட அதிக வடிவமைப்பு மற்றும் உருவாக்க சவால்கள் நிறைந்த விமானத் துறையில், ஹன்சாவின் இறுதிக்கட்ட வெற்றி மிக முக்கியமானது. பிற விமானவியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சி யாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது நிச்சயம் உற்சாகம் அளிக்கும். விமானத் துறையில் புதிய ஆராய்ச்சிகளை உள்நாட்டில் துளிர்க்கச் செய்யும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x