

மாநிலங்களவைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கியதுடன் அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
செவ்வாய் காலையில் பேரவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே மாநிலங்களவைக்கு வந்த பிரதமர் மோடி, முன் வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோனி, ஆனந்த் சர்மா மற்றும் பிரமோத் திவாரி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, சதிஷ் மிஷ்ரா ஆகியோருடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பிஜு ஜனதா தளம் கட்சியின் திலிப் குமார் டிகே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராய் ஆகியோருடனும் கைகுலுக்கினார். பின்னர் இருக்கைகளுக்கிடையே உள்ள வழியில் சென்ற மோடி, சீதாராம் யெச்சூரி, டி.கே.ரங்கராஜன் ஆகிய இடதுசாரி தலைவர்களை சந்தித்தார். அப்போது, யெச்சூரியின் தோள் மீது கைபோட்டபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இருக்கைக்கு அருகே தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் வந்து அமர்ந்தார் மோடி.
புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்பு
அப்போது, சுக்தேவ் சிங் தின்ட்சா, ஸ்வபன் தாஸ்குப்தா, சுப்ரமணியன் சாமி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் நரேந்திர ஜாதவ் ஆகிய புதிதாக நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடந்த வாரம் மத்திய அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி ஆகிய இருவரும் இன்னும் பதவியேற்றுக்கொள்ளவில்லை.