Last Updated : 21 Apr, 2016 09:51 AM

 

Published : 21 Apr 2016 09:51 AM
Last Updated : 21 Apr 2016 09:51 AM

பதநீர் தயாரிக்க தமிழகத்தின் உதவியை கேட்கும் நிதிஷ்குமார்

பதநீர் தயாரிப்பது குறித்து கோவை யில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கேட்டுள்ளார்.

கள் விவகாரத்தில் அம்மாநில எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியலே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தனது வாக்குறுதிப்படி, மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை கடந்த ஏப்ரல் 5 முதல் அமல்படுத்தினார். பிஹாரில் கள் இயற்கை பானம் என்ற கருத்து மேலோங்கியிருப்பதால் அதற்கு தடை விதிக்கப்படவில்லை. என்றாலும் கள் விற்பனையை முறைப்படுத்தும் வகையிலான 1991- ஆண்டின் கள் சட்டத்தை முழுமை யாக அமல்படுத்த அவர் உத்தர விட்டார். நகர்ப்புறங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 50 மீட்டர் சுற்றள விலும், கிராமப்புறங்களில் 100 மீட்டர் சுற்றளவிலும் கள் விற்பனையை இச்சட்டம் தடை செய்கிறது. மது விலக்கு அமலுக்கு பின் இது தீவிர மாக அமல்படுத்தப்படுகிறது.

இதனால் பிஹாரில் கள் இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை சமாளிக்க பதநீர் தயாரித்து விற்பனை செய்ய பிஹார் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அதன் தயாரிப்பு முறைகளை அறிய தமிழகத்தின் உதவியை நிதிஷ்குமார் கேட்டுள்ளார்.

இது குறித்து பிஹார் மாநில தொழில்துறை முதன்மை செயலாளர் எஸ்.சித்தார்த் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திடம் இதற்கான உதவியை கேட்டுள்ளோம். இதை ஏற்று, பல்கலைக்கழகத்தின் ஒரு குழு விரைவில் பாட்னா வரவுள்ளது. இக்குழுவின் ஆலோசனையின் பேரில் பிஹாரில் நீரா (பதநீர்) முறையாக தயாரிக்கப்பட்டு விற்கப்படும். இதன் உற்பத்தி ஓர் ஆண்டுக்குள் தொடங் கப்படும்” என்றார்.

பிஹாரில் பனை மரங்களில் இருந்து மட்டுமே கள் தயாரிக்கப்படுகிறது. இதனை பதநீராக மாற்றி, பதப்படுத்தும் தொழில்நுட்பம் பிஹார்வாசிகளுக்கு தெரியாது. இந்நிலையில் பிஹாரில் உயரதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்களின் ஆலோசனையின் பேரில், பதநீர் தயாரிப்பதற்கு தமிழகத்தின் உதவியை நிதிஷ்குமார் நாடியுள்ளார்.

எதிர்கட்சிகளின் கள் அரசியல்

இதனிடையே பிஹாரில் பனை மரம் ஏறும் பாசி சமூகத்தினருக்கு ஆதரவு என்ற பெயரில் முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

கள் இறக்கும் பாசி சமூகத்தினரை நிதிஷ் அரசு கைது செய்வதாக முன்னாள் துணை முதல்வரும், பாஜக தலைவருமான சுசில்குமார் மோடி புகார் கூறியுள்ளார்.

பாஜகவின் தோழமைக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன்ராம் மாஞ்சி, “பாரம்பரிய தொழிலை அழிக்கும் முயற்சியில் நிதிஷ் ஈடுபட்டுள்ளார். இது பாசி சமூகத்தினருக்கு எதிரானது” என குற்றம் சாட்டினார். அதேசமயம், பாசி சமூகத்தினரும் கள் விற்பனை மீதான கெடுபிடிகளுக்கு எதிராக பல்வேறு வகை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x