

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி ஆகிவிட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் உத்தி வகுப்பாளரும், மோடி அலை என்ற வார்த்தையை பாஜகவுக்காக உருவாக்கிக் கொடுத்தவருமான பிரசாந்த் கிஷோர், பிரதமருக்கு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர், ”இந்தியாவுக்கான போட்டி 2024-ல் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும். அதை மாநிலத் தேர்தல்கள் நிர்ணயிக்காது. இதைத் தெரிந்து கொள்ளுங்கள் சார். மாநிலத் தேர்தல் வெற்றியை வைத்து ஒரு பதற்றத்தை உருவாக்குவது உளவியல் ரீதியாக மக்களை சலவை செய்யும் தந்திரமான முயற்சி. ஆகையால், யாரும் இந்தப் போலி பிரச்சாரங்களுக்கு இரையாக வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று பாஜக தலைமையகத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”2017 சட்டப்பேரவைத் தேர்தலில் உ.பி.யில் பாஜகவின் வெற்றிதான் 2019 மக்களவைத் தேர்தலை தீர்மானித்தது என நிறைய பேர் சொன்னார்கள். அது இப்போதும் பொருந்தும். 2022 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலை தீர்மானிக்கப் போகிறது” என்று பேசியிருந்தார். இந்நிலையில், அதற்கு பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார்.