Last Updated : 11 Mar, 2022 02:42 PM

 

Published : 11 Mar 2022 02:42 PM
Last Updated : 11 Mar 2022 02:42 PM

கைகொடுக்காத பிரியங்காவின் மாயாஜாலம்: உ.பி.யில் காங்கிரஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வத்ரா

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களை மீண்டும் கைபற்றி பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் பஞ்சாபில் ஆட்சியை பறிகொடுத்து காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

குறிப்பாக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதை விட அந்த கட்சி அம்மாநிலத்தில் 2.33% வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்தி காங்கிரஸ் நடத்திய பிரச்சாரம் உ.பி.யில் வெற்றியை தரவில்லை. காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோற்றுப்போனார்.

ராகுலுக்கு பதில் பிரியங்கா

இதனால் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ராகுல் காந்திக்குப் பதில் பிரியங்கா காந்தி களம் இறங்கினார். உத்தர பிரதேச தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பொறுப்பாளரானார். இந்த நடவடிக்கை காங்கிரஸின் பிரம்மாஸ்திரம் என்று கட்சி நிர்வாகிகளால் மட்டுமின்றி ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்டது.

பிரியங்கா உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது 209 பேரணிகள் மற்றும் ரோட்ஷோக்கள் நடத்தினார். எந்த ஒரு தலைவரையும் விடவும் இது அதிகபட்ச களப் பிரச்சாரமாகும். ‘லட்கி ஹூன் லாட் சக்தி ஹூன்’ போன்ற வசீகரமான, கவர்ச்சிகரமான முழக்கங்களை அவர் முன் வைத்தார்.

இதுமட்டுமல்லாமல் வேட்பாளர்களில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். இது காங்கிரஸில் புதிய மாற்றம் என பல அரசியல் விமர்சகர்களும் புகழ்ந்தனர்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை பிரியங்கா காந்தி சவாலாக எடுத்துக் கொண்டு மாநிலம் முழுக்க புயல் போல சுற்றிச் சுற்றி வந்தார். கிடைத்த எந்தப் பிரச்சினையையும் அவர் விடவில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தேர்தல் பிரசாரங்களில் அவர் போகும் இடங்களில் எல்லாம் மிகப் பெரிய கூட்டம் கூடியது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரியங்கா காந்தி செயல்பட்டதால் பெண்களின் ஆதரவு காங்கிரஸுக்கு பெருமளவில் கிடைக்கும் என்றும் நம்பப்பட்டது.

முயற்சி வீணானது

பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் டிக்கெட் வழங்கியது. இந்த நடவடிக்கை கட்சிக்கு பெரும் பாராட்டுகளைப் பெற்று தந்தது. ஆனால் இதெல்லாம் வாக்குகளாக மாறவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பொதுமக்களின் ஆதரவையும் வாக்குகளையும் பெற முடியவில்லை. உன்னாவ் தொகுதியில் 2017 ஆம் ஆண்டு பாலியல் பலத்காரத்தில் இருந்து தப்பிய பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தினார் பிரியங்கா காந்தி. ஆனால் அவர் வெறும் 1,426 வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்தார்.
இங்கு போட்டியிட்ட பாஜகவின் பங்கஜ் குமார் 1,16,609 வாக்குகள் பெற்றார்.

லக்னோ மத்திய தொகுதியில் சிஏஏ-எதிர்ப்பு செயற்பாட்டாளரான சதாப் ஜாபருக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் இங்கும் அதே நிலைதான். அவர் 2,911 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. சமாஜ்வாதி கட்சியின் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா 1,04,118 வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார்.

உ.பி. தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள இடங்கள் 2 மட்டுமே. அதை விட பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடியுடன் கூட்டணி வைத்து 114 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. 8 இடங்களில் வென்றது. ஆனால் இந்த முறை அந்த வெற்றியையும் எட்டிப்பிடிக்கவில்லை.

பிரியங்காவின் செல்வாக்கு, நேரு குடும்பத்தின் மீது உ.பி. மக்கள் வைத்திருக்கும் நேசம், அம்மாநிலத்தில் காங்கிரஸின் எதிர்காலம் என பல்வேறு கேள்விகளை இந்த தேர்தல் முடிவு எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் ரஷீத் கித்வாய் கூறியதாவது:

‘‘பிரியங்கா காந்தியின் உத்திரபிரதேச பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுகிறேன். . ராகுல் மற்றும் பிரியங்கா இருவருமே உ.பி. மக்களின் நம்பக்கையை கட்டி எழுப்ப முடியவில்லை.

காங்கிரஸுக்கு இது மிகவும் சோகமான நிலை. அவர்கள் தங்கள் தேர்தல் வியூகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் கட்சிக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. அவர் உ.பி.யில் தொடர்ந்து இருப்பாரா அல்லது அவரது சகோதரரைப் போல் வெளியேறு வாரா என்ற கேள்வியே உள்ளது.’’ எனக் கூறினார்.

நேரு குடும்ப செல்வாக்கு

பிரியங்கா காந்தி முறையாக முழுநேர அரசியலில் ஈடுபட்டு உத்தரபிரதேசத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியபோது, காங்கிரஸுக்கு அவர்களது குடும்பக் கோட்டையான அமேதி மற்றும் ரேபரேலியில் இருந்து 2 எம்.பி.க்கள் மற்றும் 2 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை வெறும் ஒன்றாக உள்ளது. கட்சித் தலைவர் சோனியா காந்தி மட்டுமே தற்போது ஒரே ஒரு எம்.பி.யாக உள்ளார். அப்பகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. அவர்களது குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி மொத்தமாக காலியாகிப் போனது.

உத்தரபிரதேசம் முழுவதும் காங்கிரஸ் பல ஆண்டுகளாக சரிந்து கொண்டே இருந்ததாலும் கூட நேரு குடும்பத்தின் பெயர் இன்னும் வாக்குகளை ஈர்க்கக்கூடிய பகுதியாக அமேதி மற்றும் ரேபரேலி இருந்து வந்தது. இது காங்கிரஸின் கோட்டை என்பதை விடவும் நேரு குடும்பத்தின் கோட்டை என்ற கூற முடியும்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி தோற்கடித்தபோது காங்கிரஸ் தலைமைக்கு முதல் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த முடிவை ஏற்கெனவே எதிர்பார்த்து ராகுல் காந்தி தனது இரண்டாவது தொகுதியாக வயநாட்டில் போட்டியிட்டதாக தகவல்கள் வெளியாகின.

நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இது தொடர்கிறது. இதே நிலை தொடர்ந்தால் சோனியா காந்தியும் 2024 இல் பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

2017ல் காங்கிரஸ் சார்பில் ரேபரேலியில் வெற்றி பெற்ற அதிதி சிங், பாஜகவுக்கு தாவினார். பின்னர் அங்கு போட்டியிட்டு வென்றார். இப்போது பாஜக வேட்பாளராக மீண்டும் வென்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.

உ.பி.யில் பிரியங்கா மாயாஜாலம் செய்வார் என கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் பொதுவான தோற்றம் ஏற்பட்டது. பிரியங்காவை உ.பி. அரசியலில் தீவிர வீராங்கனையாக ஊடகங்கள் முன் நிறுத்தின.

அடுத்த பயணம் என்ன?

காங்கிரஸின் மோசமான செயல்பாடு குறித்து அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியான அஸ்வனி குமார் கூறுகையில் ‘‘ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. காந்திகளின் தலைமை இனி காங்கிரஸுக்கு வெற்றியை வழங்காது. அவர்கள் இனிமேலும் கட்சியை ஒற்றுமையாக இணைக்கும் சக்தியாக இருக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ‘‘மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எங்களது போர் தற்போது தான் தொடங்கியுள்ளது. தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவரது பயணம் தொடர்ந்து உ.பி.யை நோக்கியதா? அல்லது கட்சியின் தலைமையை நோக்கியதா என்பது காங்கிரஸ் காரியக் கமிட்டியின் ஆலோசனைக்கு பிறகே தெரிய வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x