Published : 11 Mar 2022 10:24 AM
Last Updated : 11 Mar 2022 10:24 AM

'இச்சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டும்': 10 வயது சிறுமியின் கர்ப்ப வழக்கில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

கேரள உயர் நீதிமன்றம்

திருவனந்தபுரம்: "10 வயது சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க ஒரு தாய் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்தச் சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரின் தந்தையே காரணம். இதை நினைத்து இந்தச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 10 வயது குழந்தையின் 30 வார கர்ப்பத்தைக் கலைக்க அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, இந்த வழக்கில் ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிக்குமாறு மாநில சுகாதார அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் தற்போது 30 வாரங்கள் ஆன கருவை சுமந்து கொண்டிருக்கிறார். அந்தக் கருவைக் கலைக்க அனுமதி கோரி அவரது தாயார் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு வாரத்திற்குள் இது தொடர்பான முடிவைத் தெரிவிக்குமாறு மாநில சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை மருத்துவக் குழு ஒன்று பரிசோதித்தது. அப்போது அந்தக் குழுவானது, 30 வாரங்கள் 6 நாட்கள் வளர்ந்த கருவை சிறுமி சுமந்து கொண்டிருக்கிறார். அந்தக் கரு முழுமையாக வளர்ந்து உயிர் பிழைக்க 80% வாய்ப்புள்ளது. இருப்பினும் குழந்தை பிறந்தவுடன் அதற்கு பச்சிளங் குழந்தைக்கான சிகிச்சை தேவைப்படும். மேலும், சிசுவுக்கு நரம்பியல் சார்ந்த பிரச்சினை உருவாகவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.

ஆயினும், கர்ப்பக்காலத்தின் முதிர்ந்த நிலையைக் கருதி சிசுவை பிரசவித்து அதற்கு அத்தனை சிகிச்சையையும் தர வேண்டிய நிர்பந்தம் மருத்துவ சட்டப்பூர்வமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் கர்ப்பம் தரித்துள்ள சிறுமிக்கு வெறும் 10 வயது என்பதால் பிரசவத்தின் போது அச்சிறுமிக்கு உடல் நலச் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனையறிந்த நீதிபதி, ஒருவேளை குழந்தை உயிருடன் பிறந்தால் அதனைப் பேணி பாதுகாத்து ஆரோக்கியமான குழந்தையாக வளரச் செய்ய வேண்டிய பொறுப்பு சிறுமி சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவமனையைச் சாரும் என்று உத்தரவிட்டார். பிறக்கும் குழந்தையைப் பேண ஒருவேளை சிறுமியின் குடும்பத்தாரால் முடியவில்லை, விரும்பவில்லை என்றால் குழந்தையின் சிறந்த நலனுக்கான செயல்பாடாக அதனை மருத்துவானையே செய்ய வேண்டும் என்று நீதிபதி விளக்கினார்.

சிறுமியின் தாயார், சிறுமியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு கர்ப்பத்தைக் கலைக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மன்றாடியதைத் தொடர்ந்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி ”10 வயது சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க ஒரு தாய் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்தச் சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரின் தந்தையே காரணம். இதை நினைத்து இந்தச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும் நீதித்துறை அந்த நபருக்கு உரிய தண்டனை வழங்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x