வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு: டெல்லியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு: டெல்லியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியில் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதுதான் காரணம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் நேற்று குற்றம் சாட்டினார். மேலும், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது’’ என்று கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் சர்மா மற்றும் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட காங்கிரஸார் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பாஜக.வுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.-பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in