

தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயி லில் நேற்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடந்தது.
இதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன் சிறப்பு விருந் தினராக பங்கேற்று கோயிலை சுத் தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகமவிதிப்படி தெலுங்கு புத்தாண்டான யுகாதி, வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற் சவம், ஆனிவாரா ஆஸ்தானம் ஆகிய நான்கு முக்கிய விழாக் களுக்கு முன்பாக ஆழ்வார் திரு மஞ்சன சேவை நடத்தப்படுகிறது. அதாவது முக்கிய விழாவுக்கு முன் வரும் செவ்வாய்கிழமை அன்று பன்னீர், சந்தனம், பச்சை கற்பூரம் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் கோயில் சுத்தப்படுத்தப்படு கிறது. இதை ஆழ்வார் திருமஞ்சன சேவை என அழைக்கின்றனர்.
அதன்படி வரும் 8-ம் தேதி கொண்டாடப்படவுள்ள யுகாதியை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடந்தது. இதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டு கோயிலை வாசனை திரவியங்கள் மூலம் சுத்தப்படுத்தினர்.
இதனால் நேற்று காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது. தவிர அனைத்து விதமான ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.