மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்: நட்சத்திர தொகுதியாக விளங்கும் பவானிப்பூர் - முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெறுவாரா?

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்: நட்சத்திர தொகுதியாக விளங்கும் பவானிப்பூர் - முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெறுவாரா?
Updated on
2 min read

மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ளன. ஐந்தாவது கட்டத் தேர்தல் நாளை 30-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பவானிப்பூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

கடந்த 2011-ம் ஆண்டு பவானிப் பூர் தொகுதியில், மம்தாவின் நம்பிக்கைக்குரிய சுப்ரதா பக் ஷி போட்டியிட்டு வெற்றி பெற்றார். சில மாதங்களில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மம்தாவுக்கு வழிவிட்டார். அதன்பின் நடந்த தேர்தலில் மம்தா போட்டியிட்டு 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பவானிப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் மம்தா பானர்ஜி மீண்டும் களம் இறங்கி உள்ளார். கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் மம்தா வெற்றி பெறுவார் என்று திரிணமூல் கட்சியினர் கூறுகின்றனர்.

ஆனால், மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தீபா தாஸ்முன்ஷி களம் இறங்கி இருக்கிறார். மேலும், பாஜக சார்பில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திரகுமார் போஸ் போட்டியிடுகிறார். தவிர பகுஜன் சமாஜ் கட்சி, எஸ்யூசிஐ (சி), 6 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். எனினும், மம்தா, தீபா, சந்திரகுமார் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

பவானிப்பூர் தொகுதியில்தான் மம்தா பானர்ஜியின் காலிகட் இல்லமும் இருக்கிறது. இங்கு 2 லட்சத்து 2,655 வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தொகுதியில் பெங்காலிகளுடன் குஜராத்திகள், சீக்கியர்கள், பிஹாரிகள், மார்வாரிகள் பிற சமூகத்தினர் வாழ்கின்றனர். இந்த தேர்தலில் தீதி (மம்தா) அமோக வெற்றி பெறுவார் என்று திரிணமூல் நிர்வாகிகள் உறுதியாக சொல்கின்றனர்.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொல்கத்தா (தெற்கு) தொகுதியில் சுப்ரதா பக் ஷி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், பாஜக வேட்பாளர் தத்தாகடா ராய் (தற்போது திரிபுரா ஆளுநராக இருக்கிறார்) 2-வது இடத்தை பிடித்தார். அதிலும், பவானிப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. எனவே, இந்த முறை பாஜக வெற்றி முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் தீபா தாஸ்முன்ஷிக்கு ஆதரவாக இடதுசாரியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தீபா கூறும்போது, “திரிணமூல் ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அதற்கு எதிராக மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்து சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

பாஜக சார்பில் போட்டியிடும் சந்திரகுமார் போஸ் கூறும்போது, “இந்தத் தேர்தல் பிரபலங்களுக்கு இடையில் நடப்பதாக நினைக்க வில்லை. கொள்கை, வளர்ச்சி, புறக்கணிப்புகளுக்கு இடையில் தேர்தல் நடக்கிறது. பாஜகவின் வளர்ச்சி திட்டங்களுக்கும், திரிணமூல் கட்சியின் தவறான நிர்வாகத்துக்கும் இடையில் இந்தத் தேர்தல் நடைபெறு கிறது” என்கிறார்.

நாளை 5-ம் கட்ட தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை 53 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மம்தா பானர்ஜி உட்பட 349 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தெற்கு 24 பர்கானா, தெற்கு கொல் கத்தா, ஹூக்ளி உள்ளிட்ட பகுதிகளில் 53 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இங்கு 14,500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.2 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in