

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 4 நாட்களாக நீடித்த இந்த சண்டையின் இறுதியில் தீவிர வாதிகள் அனைவரும் கொல்லப்பட் டாலும், 7 வீரர்கள் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர் பாக இந்தியா கொடுத்த நெருக் கடியால் ஐஎஸ்ஐ அதிகாரி உள்பட 5 பேர் கொண்ட கூட்டு விசாரணை குழுவை, பாகிஸ்தான் அரசு சமீபத் தில் இந்தியாவுக்கு அனுப்பி வைத் தது. இந்தக் குழு தாக்குதல் நடந்த பதான்கோட் விமானப்படை தளத் துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி யது. மேலும் தீவிரவாதிகள் கடத்திய தாக கூறப்படும் பஞ்சாப் எஸ்.பி சல்வீந்தர் சிங் உள்ளிட்ட சாட்சியங் களிடம் வாக்குமூலம் பெற்றது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ் தான் விசாரணை குழுவினரிடையே நடந்த கூட்டம் நேர்மறையாக முடிந் திருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:
பதான்கோட் தாக்குதல் தொடர் பாக இந்திய தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை பாகிஸ் தான் பரிசீலித்தது. அதில் முரண்பட்ட விஷயங்கள் ஏதுமில்லை என திருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சாட்சியங்கள் அளித்த வாக்கு மூலங்களையும் பாகிஸ்தான் விசாரணை குழுவினர் பதிவு செய்து கொண்டனர். இரு தரப்புக்கும் இந்த விவகாரத்தில் திருப்தி ஏற் பட்டுள்ளது. அதே சமயம் இந்திய விசாரணை குழு பாகிஸ்தான் செல்வார்கள். அதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை. விமானப்படை தளத்துக்குள் பாகிஸ் தான் குழுவினரை அனுமதித்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வீண் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.
பதான்கோட் தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ இ முகமது தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிக்க கோரி இந்தியா தரப்பில் ஐ.நா.விடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் சீனா அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. இது மிகவும் தவறானதாகும். இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாக். விசாரணை முடிந்தது
இதற்கிடையில் பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழுவினர் நேற்றுடன் தங்களது விசாரணையை முடித்துக் கொண்டு நாடு திரும்பி னார். அவர்களிடம் பதான்கோட் வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தீவிரவாதிகளின் டிஎன்ஏ பதிவுகள் ஆகியவற்றை தேசிய புலனாய்வு முகமை அளித்துள்ளது.