Published : 10 Mar 2022 04:25 PM
Last Updated : 10 Mar 2022 04:25 PM

யார் இந்த யோகி ஆதித்யநாத்? - அன்று துடிப்பான சீடன்... இன்று உ.பி-யின் பாஜக முகம்!

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரப் பிரேதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராவது உறுதியாகியிருக்கிறது. 5 முறை எம்.பி, இரண்டாவது முறை உ.பி முதல்வர் என அரசியல் களமாடும் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் பாதை அத்தனை எளிதாக அமைந்துவிடவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளராகக் கூட அறிவிக்கப்படாத யோகி ஆதித்யநாத், பின்னர் அம்மாநிலத்தின் பாஜக முதல்வராக கட்சியால் அறிவிக்கப்பட்டார். 1991-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்பு, 26 ஆண்டுகள் கழித்து 2017-ல் பாஜக உத்தரப் ரதேசத்தில் தனிப்பெறும்பான்மை பெற்றிருந்தது. அப்போது முதல்வராகும் போட்டியில் கட்சியின் மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, அப்போதைய மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா ​​உட்பட பலர் இருந்தனர். ஆனால், கட்சியோ யோகி ஆதித்யநாத்தை தேர்வு செய்தது.

அஜய்... ஆரம்ப காலம்: உத்தராகண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் உள்ள ஒரு கிராமத்தில், 1972-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வனக்காவலருக்கு மகனாக நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார் யோகி ஆதித்யநாத். அப்போது அவர் அஜய். தொடக்கத்தில் உறவினர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி இடதுசாரிகளின் இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அந்தக் கொள்கைகள் அவரின் மனதிற்கு ஒத்துவராததால், அதிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் அமைப்பான அகிலபாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் சேர்ந்தார்.

ராமஜென்மபூமி இயக்கத்தின்போது, கோரக்பூர் மடத்தின் இரண்டாவது மகான் அவைதிநாத்தை சந்தித்த அஜய், அவரை மிகவும் கவர்கிறார். அந்த நாட்களில் மத அமைப்புடன் தொடர்புடையவர்களால் "சோட்டா மஹந்த்" என அவர் அழைக்கப்பட்டார். அவைதியநாத்தின் சீடரான பிறகு ஆதித்யநாத் தனது குடும்பத்தை விட்டு வெளியேறினார். கரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது அவரிது தந்தையின் மறைவுக்குக்கூட ஆதித்யநாத் செல்லவில்லை. மாநிலங்களவையின் வலைதளப் பக்கத்தில் கூட ஆதியத்நாத்தின் விவரங்களில் அப்பா பெயரில் ஆதித்யநாத்தின் முன்னோடி மற்றும் குரு மஹந்த் அவைதியநாத் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்மிக அரசியல்வாதி: 90-களின் ஆரம்பக காலம் வரை ஆன்மிகவாதியாக இருந்த ஆதித்யநாத், 1994-ம் ஆண்டு மதம் சார்ந்த அதிகாரப் பரிமாற்றம் நடந்த பின்னர், 1998-ம் ஆண்டு தனது 26-வது வயதில் கோரக்பூரிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை 5 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வருகை அவரது துடிப்பான இந்துத்துவ அணுகுமுறையாலேயே குறிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு வகுப்புவாத கலவரங்கள், தொடர்ந்த நிகழ்வுகளில் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி அரசியலில், அவரின் பங்கு இந்த பிம்பத்தை வலுப்படுத்தியது. யோகியின் இந்து யுவவாஹினி அமைப்பு இந்துத்துவா மற்றும் தேசியவாதத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாக கூறிக்கொள்கிறது. பசுப் பாதுகாப்பு, லவ் ஜிகாத்திற்கு எதிராக போராடுவது கர் வாப்சி போன்றை இதன் செயல்திட்டங்கள். இந்த திட்டங்கள் பாஜகவின் வாக்குறுதிகளிலும் எதிரொலித்து 2017-ல் அக்கட்சிக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்தது.

உ.பி.யின் பாஜக முகம் ஆதித்யநாத்: பாஜக உறுப்பினராக இருந்தாலும் ஆதித்யநாதின் ஆரம்பகால பாஜக பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. அவரும் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடனும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளவும் இல்லை. கட்சியுடன் இணக்கமான உறவுவைப் பேணாத ஆதித்யநாத் ஆரம்பத்தில் கட்சியை விமர்சனமும் செய்திருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு லக்னோவில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்த சமயத்தில் தன்னுடை செல்வாக்கை நிரூபிப்பதற்காக கோரக்பூரில் இந்து மஹாசம்மேளன் ஒன்றை நடத்தினார்.

இவையெல்லாம் கோரக்பூர் பிராந்தியத்தில் அவருக்கென தனி செல்வாக்கையும், ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியிருந்தன. 2007-ம் ஆண்டு மதப் பூசலின்போது தடையாணையை மீறியதாக யோகி ஆதித்யநாத்தை காவல்துறையினர் கைது செய்தபோது, ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த காவல்நிலையத்திற்கு அவரை அழைத்து செல்ல 5 மணி நேரமாகியது. அன்று நகரமே பெரும் நெரிசலுக்குள்ளானது.

2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலின்போது பாஜகாவின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் கூட இடம் பெறாத யோகி ஆதித்யநாத், பின்னர் கட்சியின் முன்னோடிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உத்தரப் பிரதேசத்தின் 21-வது முதல்வரானார். கட்சியின் உத்தரப் பிரதேச முகமாகவும் மாறினார்.

அரசியலிலும் அதிரடி: உத்தரப் பிரதேசத்தின் முதல்வரானதும் யோகி ஆதிக்யநாத், முன்னாள் முதலவர் அகிலேஷ் யாதவ் தவறவிட்ட பிரச்சினைகளில் கவனம் குவிக்கத் தொடங்கினார். மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் ஆதித்யநாத்தின் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றப் பின்னணியுள்ளவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள். மதம் மற்றும் சாதி அடிப்படையில் போலி என்கவுண்டர்கள் நடப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்தனர். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனது ஆட்சியில் மாஃபியாக்களும் அவர்களின் உடமைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக ஆதித்யநாத் தெரிவித்து வந்தார். அவரின் அரசாங்கம் உத்தரப் பிரதேசம் முழுவதும் மின்சாரம் கிடைப்பதை பரவலாக்கியது.

மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, அரசு வேலைகள் வழங்குவதில் சிக்கல் அல்லது தாமதம், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளை சாதி அடிப்படையில் அடிக்கடி இடமாற்றம் செய்தது என பல்வேறு விமர்சனங்கள் இந்த அரசின் மீது இருந்தது. இருந்த போதிலும், இதோ 2022-ம் ஆண்டு உத்தரப் பிரதேச தேர்தலில் யோகி ஆதித்நாத்தின் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக அவரே முதல்வராகப் பதவியேற்கப் போகிறார்.

உத்தரப் பிரதேசத்தில், சுதந்திரத்துக்கு பின்பு இதுவரை எந்த ஒரு முதல்வரும் 2-வது முறையாக முதல்வர் பதவியில் அமரவில்லை. இதனை முறியடித்து யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x