பனாஜியில் பாரிக்கர் மகன் தோல்வி; வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் மான்சரெட்டா ‘அதிருப்தி’

பாஜக வேட்பாளர் அடனாஸியோ மான்செரட்டா
பாஜக வேட்பாளர் அடனாஸியோ மான்செரட்டா
Updated on
1 min read

பனாஜி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பனாஜி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அடனாஸியோ மான்செரட்டா மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார். பாஜக ஆதரவாளர்களே தனக்கு வாக்களிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எனது வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவு. எனக்கு எனது கட்சிக்காரர்களே வாக்களிக்காதது தான் இதற்குக் காரணம். நான் இதை பாஜக தலைவர்களிடம் கூறியுள்ளேன். நான் பாஜக தலைவர்களுக்கு இது குறித்து சொல்லியுள்ளேன்" என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார். மேலும், தான் இப்போதும் பாஜகவில்தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மான்சரெட்டா கடந்த 2019 இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் பாஜகவுக்குத் தாவினார். இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. இந்நிலையில், திடீரென கட்சி மீது அவர் அதிருப்தி தெரிவித்துள்ளதால் மீண்டும் கட்சி தாவுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உத்பல் பாரிக்கர் பாஜகவில்தான் இருந்தார். அவர் தனது தந்தையின் பனாஜி தொகுதியை கோரினார். ஆனால், அவருக்கு அந்தத் தொகுதிக்குப் பதிலாக வேறு ஒரு தொகுதி ஒதுக்குவதாகக் கூறப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த உத்பல் பாரிக்கர் பனாஜியில் சுயேச்சையாக களமிறங்கினார். இவரை ஆதரித்து சிவ சேனா பிரச்சாரம் செய்தது. மனோகர் பாரிக்காருக்காக உத்பல் பாரிக்கருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

கோவாவில் நிலவரம் என்ன?

பாஜக 19
காங்கிரஸ் 12
திரிணமூல் காங்கிரஸ் 3
ஆம் ஆத்மி 3
சுயேச்சை 3

இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளதால் விரைவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in