விவசாயிகள் பலியான லக்கிம்பூர் கேரியில் பாஜக முன்னிலை

விவசாயிகள் பலியான லக்கிம்பூர் கேரியில் பாஜக முன்னிலை
Updated on
1 min read

லக்னோ: விவசாயிகள் மீது தாக்குதல் நடந்து பெரும் சர்ச்சை நடந்த லக்கிம்பூர் கேரியில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 203 இடங்களை கடந்து அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் சூழல் உள்ளது. இந்தநிலையில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

விவசாய சட்டங்கள் காரணமாகவும் விவசாயிகள் போராட்டத்தை பாஜக கையாண்ட விதத்திலும் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் பாஜக மீது கடும் கோபத்தில் இருந்தனர். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது காரை மோதியதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இச்சம்பவத்திற்காக அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்திய போதிலும், அவர் அமைச்சரவையில் தொடர்கிறார். இதுவும் கூட விவசாயிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மொத்தம் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கூட நீண்ட நாட்களுக்குப் பின்னரே கைது செய்யப்பட்டார்.

இதனால் லக்கிம்பூர் கேரி சம்பவம் உ.பி. தேர்தலில் பெரும் பேசும் பொருளானது. ஆனால் உத்தரப் பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வரும் நிலையில் லக்கிம்பூர் கேரியில் பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

லக்கிம்பூர் கேரி உத்தரப் பிரதேசத்தின் ஆவாத் பகுதியில் உள்ளது. லக்கிம்பூர் கேரியில் போட்டியிடும் வேட்பாளர்களில் காங்கிரஸின் ரவிசங்கர் திரிவேதி, பாஜகவின் யோகேஷ் வர்மா, எஸ்பியின் உட்கர்ஷ் வர்மா, பிஎஸ்பியின் மோகன் பாஜ்பாய், ஏஐஎம்ஐஎம்மின் மோ. உஸ்மான் சித்திக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். எனினும் இது தொடக்க நிலை வாக்கு எண்ணிக்கை மட்டுமே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in