Published : 10 Mar 2022 07:20 AM
Last Updated : 10 Mar 2022 07:20 AM
புதுடெல்லி: ‘இந்த மாதிரி முறைகேடுகள் நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்’ என்று என்எஸ்இ (தேசிய பங்குச் சந்தை) கோ-லொகேஷன் தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘வழக்குப் பதிவு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் விசாரணை நடத்திவருகிறீர்கள். சீக்கிரத்தில் விசாரணையை முடியுங்கள்’ என்று சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முறைகேட்டை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி யையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
என்எஸ்இ 2010-ம் ஆண்டு கோ-லொகேஷன் வசதியை அறிமுகப் படுத்தியது. என்எஸ்இ சர்வர் இருக்கும் இடத்திலேயே பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் தங்கள் சர்வர்களை அமைத்துக் கொள்ள அது வழி செய்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி சில தரகு நிறுவனங்கள் முறைகேடான வழியில் பங்குச் சந்தை நிலவரங்களை அறிந்தன.
இந்த முறைகேடு தொடர்பாக 2018-ம் ஆண்டு ஒபிஐ செக் யூரிட்டிஸ் என்ற பங்குச் சந்தை தரகு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிகள் சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் ஆகியோர் மீதும், முன்னாள் குழும செயல்பாட்டு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின் பெயரிலே என்எஸ்இ தொடர்பான நிர்வாக முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை யோகியின் ஆலோசனையின்படி சித்ரா ராமகிருஷ்ணா பணி நியமனம் செய்ததாகவும் செபி குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் மிகப் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ள நிலையில், ஆனந்த்சுப்ரமணியனை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மார்ச்6 அன்று சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. தற்போது சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐ காவலில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT