

காஷ்மீரின் இதயத்தில் ரணம் உள்ளது என்றும், அனைவரும் இணைந்து இந்த ரணத்தை உடனடியாக சரி செய்ய முன்வர வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி பேசினார்.
ஜம்முவிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள கத்ராவில் ஸ்ரீ வைஷ்ணவ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இன்று திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மெகபூபா பேசும்போது, “பாகிஸ்தான், சிரியா, லிபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் அமைதியின்மை நிலவுகிறது. ஒரே மதத்தைச் சேர்ந்த சன்னி, ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களிடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் இந்தியாவில் வசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால், காஷ்மீரின் இதயத்தில் ரணம் உள்ளது. நாம் அனைவரும் இணைந்து இந்த ரணத்தை உடனடியாக சரி செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான், நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்களைப் போல இங்குள்ள இளைஞர்களும் வளமாக வாழவும் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கவும் முடியும்” என்றார்.
ஹந்த்வாராவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் சம்பவங்களை மனதில் வைத்து மெகபூபா இவ்வாறு பேசினார்.