

கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி கன்னூரில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
புட்டிங்கல் கோயில் வெடி விபத்தில் பலர் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் மேற்கொண்டு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும் இந்த விபத்து காரணமாக கோயிலைச் சுற்றி இருந்த பல வீடுகள், சொத்துகள் பலத்த சேதமடைந்தன. இதனால் பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சேதம் குறித்து மதிப்பிடுவதற்காக, அமைச்சர்கள் அடூர் பிரகாஷ், வி.எஸ்.சிவகுமார் மற்றும் ஷிபு பாபி ஜான் ஆகியோர் தலைமையில் அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசிடம் ரூ.117 கோடி நிதியுதவி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவு, அவர்களின் மறுவாழ்வுப் பணிகள், சேதமடைந்த சொத்துகளுக்கு இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். இவ்வாறு உம்மன் சாண்டி தெரிவித்தார்.
கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் இரு பிரிவினர் இடையே பட்டாசு, வாண வேடிக்கை போட்டி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். காயமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.