Last Updated : 08 Mar, 2022 10:21 AM

2  

Published : 08 Mar 2022 10:21 AM
Last Updated : 08 Mar 2022 10:21 AM

உக்ரைனிலிருந்து சொந்தச் செலவில் நாடு திரும்பிய 255 தமிழக மாணவர்கள்: 30 தமிழர்கள் வரவிரும்பாமல் அங்கேயே தங்கினர்

புதுடெல்லி: உக்ரைனிலிருந்து தமது சொந்தச் செலவில் 255 தமிழக மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 30 தமிழர்கள் தமக்கு பிரச்சினை இல்லை எனக் கூறி உக்ரைனிலேயே தங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 24 ல் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அதன்பின்னர் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த ஆபரேஷனில் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து, தமிழக எம்.பிக்கள் குழுவையும் உக்ரைனுக்கு அனுப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக, மாநிலங்களவையில் திமுக அவைத் தலைவரான திருச்சி சிவா தலைமையில் ஒரு குழுவும் அமைத்தார். இக்குழு டெல்லிக்கு வந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்துப் பேசியது. வெளியுறவு அமைச்சரின் விளக்கம் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தது. இதனால், எம்.பிக்கள் குழு அமைச்சரின் அறிவுறுத்தலின்படி உக்ரைன் செல்லும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. இத்துடன், டெல்லியிலுள்ள தமிழநாடு அரசு இல்லத்தில் முகாமிட்டு மீட்புப் பணியை தீவிரப்படுத்தியது.

இதன் பலனாக உக்ரைனில் மீட்கப்பட்டு டெல்லிக்கு வந்த தமிழக மாணவர்கள், நேற்று இரவு வரை 1196 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக, முதன்முறையாக தனிவிமானங்கள் அமர்த்தப்பட்டன. இதன் செலவுகளை ஏற்ற தமிழக அரசு கடந்த மூன்று தினங்களாக விஸ்தாரா நிறுவனத்தின் தனிவிமானங்களை ஏற்பாடு செய்திருந்தது.

இது குறித்து மாநிலங்களவையின் மூத்த எம்.பியுமான திருச்சி சிவா கூறும்போது, ‘உக்ரனிலிருந்து தாமாகவே 255 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்கள் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’ மற்றும் தமிழக அரசின் மீட்பு முயற்சி அன்றி தாமாகவே வந்து சேர்ந்துள்ளனர்.

மேலும் முப்பது தமிழக மாணவர்கள் தாங்கள் நாடு திரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் நிலைமை சீராகி விடும் என்பதால், தாம் அங்கேயே தங்க விருப்பம் கூறியுள்ளனர்.

இன்று (பிப்ரவரி 8 செவ்வாய்கிழமை) இன்னும் ஆறு விமானங்கள் உக்ரைனிலிருந்து வரவிருக்கின்றன. இதிலும் சுமார் 200 தமிழக மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

உக்ரைன் போர் காரணமாக சுமி நகரில் அச்சம் தரக்கூடியச் சூழல் இருந்தது. இங்கு 68 தமிழர்கள் அடங்கிய 650 இந்திய மாணவர்கள் சிக்கியிருந்தனர்.

தற்போது சுமியில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு பிரச்சனையில்லை. இவர்களில் 68 தமிழக மாணவர்கள் நாடு திரும்ப எங்களது தொடர்பில் வந்துள்ளார்கள்.அவர்கள் அனைவரும் இந்தியா கிளம்பத் தயாராகவும் உள்ளனர். இவர்களுடன் லிவ் நகரிலிருக்கும் மாணவர்களும் வந்துவிட்டால், ஓரளவிற்கு தமிழர்கள் மீட்கப்பட்டுவிடுவர்.

ஐரோப்பிய எல்லை நாடுகளிலிருந்து மீட்பு விமானங்களில் வீடு திரும்பவும் 67 தமிழக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இதன்மூலம், நம் மாணவர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி இந்தியா வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினால், எம்.பி திருச்சி சிவா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், கலாநிதி வீராச்சாமி மற்றும் எம்.முகம்மது அப்துல்லா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை உள்ளுரை ஆணையர் அதுல்ய மிஸ்ராவும் இணைந்து, தமிழக மாணவர்கள் வீடு திரும்பும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதுவரை மீட்கப்பட்ட இந்தியர்களில் சுமார் 1,800 பேர் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’வில் மீட்கப்பட்டுள்ளனர். இப்பணி,வரும் மார்ச் 10 ஆம் தேதி வரை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x