

அசாமில் காவல்துறை கண்காணிப்பாளரும் அவரது உதவியாளரும் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அசாம் மாநிலம் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் மீதான என்கவுன்டரின்போது, அசாம் காவல்துறை கண்காணிப்பாளர் நித்யானந்த கோஸ்வாமி மற்றும் அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டனர்.
அசாம் மாநிலத்தில், கர்பி இன மக்களுக்கு தனி மாநிலம் அமைத்துத் தர நீண்ட காலமாக கோரிக்கை இருந்துவருகிறது. அந்த இனத்தை சேர்ந்த சிலர் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள ரோங்டாங் காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ள பிரிவினைவாதிகளை பிடிக்க ஹம்ரேன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்திய போது, கிளர்ச்சியாளர்களுக்கும் காவல்துறையினருக்கு இடையே விடிய, விடிய கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இதில், சுட்டதில் ஹம்ரேன் மாவட்ட காவல் ஆணையர் நித்யானந்தா கோஸ்வாமி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர், பிரிவினைவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியாயினர்.
இதனை அசாம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.பி.ரவுத் உறுதி செய்துள்ளார். என்கவுன்டரின் போது ஹம்ரேன் ஆணையரும் அவரது பாதுகாவலரும் வீர மரணம் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.