Published : 08 Mar 2022 07:18 AM
Last Updated : 08 Mar 2022 07:18 AM

ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வாக்கெடுப்பை புறக்கணித்தது பற்றி இந்தியா விளக்கம்

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொது சபை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா பங்கேற்கவில்லை.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான குவாட்டின் ஆலோசனை கூட்டம் அண்மையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. தீர்மானங்களில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் இந்தியா இன்று வரை நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறி யிருப்பதாவது: உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. ஐரோப்பிய நாடு களான ஹங்கேரியும் செர்பியாவும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளன. அந்த நாடுகள்கூட ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளன.

ஆசிய கண்டத்தில் இந்தியா இருந்தாலும் சர்வதேச அரங்கில் நமது நாட்டின் நிலைப்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு சர்வதேச அளவில் நிர்பந்தம் அளிக்கப்படுகிறது. நாம் போரை விரும்பவில்லை. அதேநேரம் நமது நாட்டின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேட்டோ நாடுகள்

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளோ, ஐரோப்பிய நாடுகளோ ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடவில்லை. உக்ரைனில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கக் கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்கி, நேட்டோ நாடுகளின் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்ஜி கூறும்போது, நேட்டோ சார்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டால் ஐரோப்பா முழுவதும் போர்வெடிக்கும். பல்வேறு நாடுகளைசேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள். நேட்டோ நாடுகளை பாதுகாக்க நாங்கள் நேரடியாக போரில் ஈடுபட மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அரசிடமும் உக்ரைன் அதிபர்ஜெலன்கி பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அமெரிக்க அரசு பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறது. அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய நாடுகள் தங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. தங்கள் நாடுகளுக்கு துளியும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன.

நடுநிலையில் மாற்றமில்லை

இதே அணுகுமுறையில்தான் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். கடைசி வரை இதையே வலியுறுத்துவோம். நடுநிலைமையில் இருந்து ஓர் அங்குலம்கூட விலக மாட்டோம்.

இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x