

மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
அலிபுர்துவார் மாவட்டம் பிர்பாராவில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மோடி பேசியதாவது:
கடந்த பேரவைத் தேர்தலின் போது மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. ஆனால், எந்தவித மாற்றத் தையும் ஏற்படுத்தவில்லை. இதன் மூலம் பொதுமக்களை தவறாக வழி நடத்தி உள்ளார்.
இப்போது, ‘தாய், தாய்நாடு, பொதுமக்கள்’ (மா, மாதி, மானுஷ்) நலன் பற்றி இவர் பேசுகிறார். ஆனால் மரணமும் (மாவுத்) பணமும்தான் இங்கு இருக்கிறது. நரதா ஸ்டிங் ஆப்ரேஷன் இதை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.
மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற் காக, மத்திய அரசு கூட்டிய முதல் வர்கள் கூட்டங்களை எல்லாம் இவர் (மம்தா) புறக்கணித்தார். இந்தக் கூட்டங்களை நான் கூட்டினேன் என்ற காரணத்துக்காகவே இவர் அதில் கலந்துகொள்ளவில்லை.
மேலும் இந்தத் தேர்தலில் மம்தா வுக்கு எதிராக இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கைகோத்துள் ளன. ஆனால், மம்தா டெல்லிக்குப் போகும்போது சோனியா காந்தியை சந்தித்து ஆசி பெறுகிறார். இந்த உறவைப் புரிந்துகொள்ள முடிய வில்லை.
கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த பாலம் சமீபத்தில் இடிந்து விழுந்தது. இதற்கு இடதுசாரிகள் ஆட்சியின்போது வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்களே காரணம் என்று குற்றம்சாட்டினார். ஒருவேளை இந்தப் பாலம் நல்ல முறையில் கட்டப்பட்டிருந்தால், இடதுசாரிகளை பாராட்டி இருப்பாரா? அப்படிச் செய்திருக்க மாட்டார். மாறாக அதற்கான புகழை தனதாக்கிக் கொண்டிருப்பார்.
சாரதா சீட்டு நிறுவன ஊழலில் தொடர்புடையவர்களை பாதுகாக்க மம்தா முயற்சிக்கிறார். சுதந்திரத் துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் ஆட்சியில் இருந்த னர். அதன் பிறகு மம்தா ஆட்சிக்கு வந்தார். ஆனால் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. எனவே, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களது (பொதுமக்கள்) எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்காது. பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலம் வளர்ச் சிப் பாதைக்குத் திரும்பும். இவ் வாறு மோடி பேசினார்.