Published : 07 Mar 2022 08:22 AM
Last Updated : 07 Mar 2022 08:22 AM

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் முதல்கட்ட மெட்ரோ ரயிலை தொடங்கினார் பிரதமர் மோடி: டிக்கெட் வாங்கி சிறுவர்களுடன் பயணம் செய்தார்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். படம்: பிடிஐ

புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தார்.

மகாராஷ்டிராவில் புணே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 32.2 கி.மீ. தூரம் கொண்ட புணே மெட்ரோ ரயில் திட்டத்தில் முதற்கட்டமாக 2 வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை தொடங்கி வைக்க புணேவில் உள்ள லோகிகாவ்ன் சர்வதேச விமான நிலையத்துக்குப் பிரதமர் மோடி நேற்று காலை வந்தடைந்தார். அங்கு மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநில கேபினட் அமைச்சர் சுபாஷ் தேசாய், எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் உட்பட முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இத்திட்டத்தில், கார்வார் கல் லூரி முதல் வனஸ் (5 கி.மீ.) வரை மற்றும் பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சியில் இருந்து புகேவடி வரை (7 கி.மீ.) என மொத்தம் 12 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டன. இத்திட்டத்துக்கான செலவு ரூ.11,400 கோடியாக கணக்கிடப் பட்டுள்ளது.

இந்நிலையில், புணே மெட்ரோரயில் சேவை தொடக்க விழா,கார்வார் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் பிரதமர் நரேந்தி மோடி கொடியசைத்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு அமைக் கப்பட்டிருந்த புணே மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பின்னர் கார்வார் ரயில் நிலை யத்தில் இருந்து ஆனந்த்நகர் ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். முன்னதாக கார்வார் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கியோஸ்க்’ இயந்திரம் மூலம் ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்டார்.

மொத்தம் 10 நிமிடம் மெட்ரோ ரயில் பயணத்தின் போது, சிறுவர்கள், மாற்றுத் திறனாளி சிறுவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடிபடி சென்றார்.

முன்னதாக புணே மாநகராட்சி வளாகத்தில், சத்ரபதி சிவாஜி சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்தச் சிலை 1,850 கிலோ ‘கன்மெட்டல்’ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9.5 அடி உயரமுடையது. பின்னர் மாநகராட்சியில் உள்ள சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிராவ் புலே சிலைக்கும் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி ட்விட் டரில் வெளியிட்ட பதிவில், ‘‘புணேமக்களுக்கு வசதியான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்று மகிழ்ச்சி தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x