Last Updated : 18 Apr, 2016 05:56 PM

 

Published : 18 Apr 2016 05:56 PM
Last Updated : 18 Apr 2016 05:56 PM

கத்திக்குத்து, கொள்ளை சம்பவம் எதிரொலி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த கத்திக்குத்து மற்றும் கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கள் முகத்தை துணியால் மூடிச் செல்ல இனி அனுமதி இல்லை என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) அறிவித்துள்ளது.

டெல்லியின் ராஜேந்திர நகர் மெட்ரோ ரயில் நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குள் கடந்த வாரம் திங்கள்கிழமை 2 பேர் அத்து மீறி நுழைந்தனர். பிறகு அங்கிருந்த ஊழியரை கத்தியால் குத்திவிட்டு, பயணக்கட்டணத் தொகை ரூ. 12 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இருவரும் தங்கள் முகத்தை துணியால் மூடியிருந்ததால் கண்காணிப்பு கேமரா பதிவில் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. சிஐஎப்எஸ்-ன் தீவிர பாதுகாப்பில் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் இருந்து வரும் நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி கைக்குட்டை, துப்பட்டா, சேலை தலைப்பு, மப்ளர், சர்ஜிக்கல்மாஸ்க் போன்றவற்றால் பயணிகள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழையவும், ரயில்களில் பயணம் செய்யவும் சிஐஎஸ்எப் தடை விதித்துள்ளது. ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால் குற்றவாளிகளை அடையாளம் காண இது உதவியாக இருக்கும்

என சிஐஎஸ்எப் கருதுகிறது. சர்ஜிக்கல் மாஸ்க் கட்டாயம் அணியும் அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சோதனைக்கு பின் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் சிஐஎஸ்எப் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “கத்திக்குத்து மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பிறகு கடந்த வாரம் மத்திய உள்துறை, உளவுத் துறை, டெல்லி காவல் துறை மற்றும் சிஐஎஸ்எப் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு அறை, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் இதை உடனே அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு டெல்லி ராஜீவ் சோக் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுதற்கொலை செய்துகொண்டார். இதற்காக அவர்கைத்துப்பாக்கியை தனது சிறிய கைப்பெட்டியில்வைத்து கட்டண நுழைவாயிலுக்கு அருகில் உள்ளகண்ணாடி தடுப்புகளுக்கு கீழாக கொண்டுவந்திருந்தார். இந்த தடுப்புகளை முழுமையாக மூடவும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில்களில் அன்றாடம் சுமார் 26 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சுமார் 150 மெட்ரே ரயில் நிலையங்களில் சிஐஎஸ்எப் வீரர்கள் சுமார் 5000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2 பேர் கைது

இதனிடையே ராஜேந்திர நகர் மெட்ரோ நிலைய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 2 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் மெட்ரோ ரயில் நிலைய முன்னாள் ஊழியர் எனத் தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த தேடுதல் வேட்டையில் இவர்கள் சிக்கினர். இவர்களிடம் கொள்ளைப் பணத்தில் 10.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x