உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவ, மாணவியரை உடனடியாக மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். தர் வாதிடும்போது, ‘‘உக்ரைனின் ருமேனியா எல்லைப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிதவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரினார்.
தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியதாவது: உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களின் நிலை வருத்தமளிக்கிறது. ருமேனியா எல்லை அருகே சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பரிதவிப்புடன் காத்திருக்கிறனர்.
உக்ரைனில் போர் நடக்கிறது. இந்திய தலைமை நீதிபதி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றுசமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போரை நிறுத்த ரஷ்யாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல்உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறும்போது, ‘‘உக்ரைனை தாண்டி ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் வந்தால்மட்டுமே அவர்களை மீட்க முடியும். உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் சென்றுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்'' என்று உறுதி அளித்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி,தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.
- பிடிஐ
