

டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரது காதலர் ராகுல் ராஜ் சிங் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கலர்ஸ் டிவி சேனலில் ஒளி பரப்பான ‘பாலிகா வாது’ தொடரில் ஆனந்தி கதாபாத்திரத்தில் அறி முகமானவர் நடிகை பிரதியுஷா பானர்ஜி (24). இதன் தமிழ் டப்பிங், ராஜ் டிவியில் மண் வாசனை என்ற பெயரில் ஒளிபரப் பாகி வருகிறது. இந்நிலையில் பிரதியுஷா மும்பையில் உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீஸார், பிரதியுஷாவின் காத லரும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ராகுல் ராஜ் சிங்கிடம் நேற்று முன்தினம் விசாரித்தனர்.
2-வது நாள் விசாரணை
2-வது நாளாக நேற்றும் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது, ராகுலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கண்டிவிலி பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பிரதியுஷா மற்றும் ராகுலின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் மீண்டும் ராகுலிடம் விசாரணை நடத்துவோம். மேலும் இருவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.
இதனிடையே, பிரதியுஷாவின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் 2 செல்போன்கள் கிடைத்துள்ளன. அதில் பதிவாகி உள்ள அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.