

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், பழங்குடியினர் நலன்களுக்காக போராடுபவருமான ஜி.என்.சாய்பாபா, சரியான நேரத்தில் தனக்கு சிகிச்சையை மறுத்ததன் மூலம் தன்னை அரசு கொலை செய்யப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள பேராசிரியர் சாய்பாபா, பழங்குடியினர் நலன்களுக்காக போராடி வருபவர் என்பதோடு சக்கர நாற்காலிதான் இவரது இருப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜாமீனில் உள்ள ஜி.என்.சாய்பாபா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
“என்னுடைய நோய்களின் மூலம் எனக்கு சிகிச்சை அனுமதி அளிக்காமல் அரசும், போலீஸும் என்னை மவுனமாகக் கொலைச் செய்யப் பார்த்தது. அவர்கள் என்னை சுட்டுவீழ்த்த வேண்டிய அவசியமில்லை, இப்படிச் செய்தாலே போதுமானது, இந்த வகையில் அவர்கள் என்னை கொலை செய்யப் பார்த்தனர் என்றே நான் கருத வேண்டியுள்ளது.
இம்முறை எனக்கு எந்த வித சிகிச்சையும் அனுமதிக்கப்படவில்லை. முட்டை வடிவ உயர் பாதுகாப்பு செல்லில் நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். முதல் தடவை சிறையில் அடைக்கப்பட்ட போது 27 முறை சிகிச்சைக்காக என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் இம்முறை சிறையில் உள்ள மருத்துவமனைக்குக் கூட என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும் சிறை மருத்துவமனை அடுத்த தெருவில்தான் உள்ளது. மேலும் எனக்கு எந்த மருந்துகளும் கொடுக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் அவர்கள் கூறியதும் அப்பட்டமான பொய். என்னால் எனது இடது கையை இப்போது தூக்க முடியவில்லை. பிறர் உதவியின்றி என்னால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியவில்லை. மறு-கைது எனது சிகிச்சைக்கு முட்டுக் கட்டை போட்டது. இதனால் எனது உடல் நிலை மேலும் மோசமடைந்ததுதான் நடந்தது.
எதற்காக உங்களை இப்படி நடத்த வேண்டும்?
எனது செயல்பாடு அவர்களுக்கு அச்சமூட்டுகிறது. ஆதிவாசி மக்களிடையே நான் மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் அரசாங்கத்துக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் அவர்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்தனர். என்னைக் கைது செய்வதற்கு முன்னதாகவும் நிறைய முறை எச்சரிக்கப்பட்டேன். நான் எனது செயல்களை நிறுத்தவில்லையெனில் கைது செய்வோம் என்று தெளிவாக அவர்கள் எச்சரித்திருந்தனர்.
சாமானிய மக்களுக்காகப் பேசும் அறிவுஜீவிகளை அச்சுறுத்துவதற்காகவே அரசு இவ்வாறு செய்கிறது. என்னைப் போன்று சக்கர நாற்காலியில் வளைய வரும் ஒருவருக்கே அரசாங்கம் இவ்வாறு செய்ய முடியும் போது மற்றவர்களுக்கும் இதே கதிதான் என்பதை அவர்கள் என்னை வைத்து அச்சுறுத்துகின்றனர். அடிமட்ட எதார்த்தங்களையும் உண்மைகளையும் பேசவிடாமல் செய்ய ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கவே அரசு இப்படி செய்கிறது.
இவர்களது ‘வளர்ச்சி’ பற்றிய கொள்கைகளை விமர்சித்து அடிப்படைக் கேள்விகளை எழுப்பும் எந்த ஒரு செயல்பாட்டாளர், அறிவு ஜீவி அல்லது யாராக இருந்தாலும் அவர்கள் மாவோயிஸ்ட் என்று முத்திரைக் குத்தப்படுவதுதான் இப்போது நடந்து வருகிறது.
இவ்வாறு கூறினார் பேராசிரியர் சாய்பாபா.
பேராசிரியர் சாய்பாபா... பின்னணி விவரம்:
மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களினால் கடும் துயரங்களை அனுபவித்து வந்த பழங்குடியின மக்களின் நலன்களுக்காக போராடியவர் ஜி.என்.சாய்பாபா. மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களினால் பழங்குடி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட போது மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை இவர் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரங்கள் மேற்கொண்டார்.
ராணுவத் தாக்குதலுக்கு எதிராக மிகவும் தீவிரமாக இவர் தேசிய அளவில் கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தார். இவர் ஒருங்கிணைத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆதிவாசிப் பகுதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றனர்.
1990-ம் ஆண்டுகளில் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் சமூக செயல்பாட்டாளராக இருந்த சாய்பாபா, 1990-ம் ஆண்டுகளின் நடுப்பகுதிகளில் ஆந்திர போலீஸின் என்கவுன்டர் கொலைகளை எதிர்த்துப் போராடினார். என்கவுன்டர் என்ற பெயரில் ஆந்திர போலீஸ் அப்பாவிகளையும், நக்சலைட்டுகளையும் கொன்று குவித்தது என்பதே இவரது வாதம்.
2000-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பேராசிரியர் சாய்பாபா, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
செப்டம்பர் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு 'பசுமை வேட்டை' நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதாவது பழங்குடியினர் பகுதிகளிலிருந்த மாவோயிஸ்ட்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை அது. அப்போது ஆதிவாசிகளின் நலனுக்காக செயல்படத் தொடங்கினார் சாய்பாபா.
இந்நிலையில், மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டு, 14 மாதங்கள் நாக்பூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்தார்.
இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும், அவரது ஜாமீனை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் கடந்த டிசம்பர் மாதம் முதல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் சிறையில் இருந்தார், தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.