Published : 03 Mar 2022 01:32 PM
Last Updated : 03 Mar 2022 01:32 PM

உக்ரைன் மீது ரஷ்யா போர்: இன்று 19 விமானங்களில் 3,726 இந்தியர்களை மீட்க நடவடிக்கை

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திர்களில் 3,726 பேரை இன்று ஒரே நாளில் மீட்க 19 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா' என பெயரிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களை விரைவாக அழைத்து வர விமானப்படையின் உதவி நாடப்பட்டுள்ளது. மீட்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திர்களில் 3,726 பேரை இன்று ஒரே நாளில் மீட்க 19 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இயக்கப்படும். உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் இந்தியர்கள் தரைவழியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

ஆபரேஷன் கங்கா நடவடிக்கையின் கீழ், புக்கரெஸ்டில் இருந்து 8 விமானங்களிலும், சூசேவாவிலிருந்து 2 விமானங்களிலும், கோசிஸிலிருந்து 1 விமானத்திலும், புடாபெஸ்டிலிருந்து 5 விமானங்களிலும், ரேஸ்ஸோவிலிருந்து 3 விமானங்களிலும் 3726 இந்தியர்கள் இன்று சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படியும், அனைவரின் ஒத்துழைப்புடனும் 3,726 பேர் இன்று வீடு திரும்புவார்கள். ஜெய் ஹிந்த்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது ருமேனியாவில் இருக்கிறார். மத்திய அஐமச்சர்கள்ஹர்தீப் சிங் பூரி (ஹங்கேரி), கிரண் ரிஜிஜு (ஸ்லோவாக்கியா) மற்றும் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங் (போலந்து) ஆகிய மூன்று மத்திய அமைச்சர்களுடன் சேர்ந்து இந்தியர்களை அழைத்து வரும் பணிகளை அவர் ஒருங்கிணைத்து வருகிறார்.

உக்ரேன் வான்வெளி மூடப்பட்டதால், உக்ரைனின் மேற்குபகுதியில் உள்ள அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x