அரசு குழந்தைகள் மையங்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தற்காப்பு பயற்சி அளிக்க மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: பெண்களின் பாதுகாப்புக்காக அரசு நடத்தும் குழந்தைகள் மையங்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிலையில், டெல்லியில் நடந்த பெண்களின் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறை களில் இருந்து அவர்கள் தங் களை பாதுகாத்துக் கொள்ள பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அவசியமானது. தங்களை தாங் களே பாதுகாத்துக் கொள்ளவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் பெண்களுக்கு தற்காப்புக்கலை முக்கியமானது. பெண்கள் பாதுகாப்பின் முக்கிய அங்கமாக இளம் பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசால் நடத்தப்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கான தங்குமிடங்களிலும் 704 மையங்களில் இளம் பெண்கள், பெண் பணியாளர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அவசரகால உதவி எண்
தேசிய அவசரகால உதவி எண் 112 மற்றும் பெண்களுக்கான உதவி எண்ணான 181 ஆகியவை இணைக்கப்படும். இந்த 2 எண்களில் எதை அழைத்தாலும் ஆபத்தில் உள்ள பெண்கள் உதவிகளை பெற முடியும். ஆபத்தில் உள்ள பெண்கள் 112 எண்ணை அழைத்தால் அது 181-க்கு அனுப்பப்படும். இது ஆபத்துக் காலத்தில் பெண்களுக்கான உதவியை மேம்படுத்தும்.
இவ்வாறு அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார்.
