Published : 03 Mar 2022 07:43 AM
Last Updated : 03 Mar 2022 07:43 AM

டெல்லி தமிழ் சங்கத்துக்கு விஜயம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி: ஏப்ரலில் 75-ம் ஆண்டு நிறைவு பவள விழா கொண்டாட்டம்

புதுடெல்லி: தமிழர்களுக்கான பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை வட மாநிலங்களில் வளர்க்கும் அமைப்பாக இருப்பது டெல்லி தமிழ்ச் சங்கம். இச்சங்கம் தொடங்கி வரும் ஏப்ரலுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதற்கான பவள விழாவை கொண்டாட அதன் தலைவர் வீ.ரெங்கநாதன் தலைமையில் அதன் நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.பவள விழாவை முன்னிட்டு தயாராகி வரும் மலரில் வாழ்த்துச் செய்தி கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதை படித்த ஆளுநர் நேற்று தனது பணியின் காரணமாக டெல்லிவந்தவர், திடீரென நேற்று மதியம் 3.00 மணிக்கு டெல்லி தமிழ்ச் சங்கக் கட்டிடத்திற்கு வந்திருந்தார்.

டெல்லியில் தமிழர்கள் அதிகம்வாழும் பகுதியான ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ள சங்கத்தின் கட்டிடத்தில் ஆளுநர் ரவியை அதன் நிர்வாகிகள் வரவேற்றனர். கட்டிடத்துக் குள் சென்று சுற்றிப் பார்த்து ஒரு மணி நேரம் செலவிட்ட ஆளுநர், சங்கத்தின் நிர்வாகி களைப் பாராட்டினார். மேலும், அவர் களுக்கு சில ஆலோசனைகளையும் ஆளுநர் ரவி வழங்கிச் சென்றார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஓய்வுபெற்ற ஐபிஎஸ்அதிகாரியும் சங்கத் தலைவருமான ரெங்கநாதன் கூறும்போது, "டெல்லியில் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் டெல்லித் தமிழ்ச் சங்கத்தின் பணிகளை ஆளுநர் ரவி வெகுவாகப் பாராட்டினார். சங்கத்திலுள்ள தீரர் சத்தியமூர்த்தி நூலகத்தில் இருந்த நூல்களின் வகைகளையும் அவர் பார்த்து வியந்தார். வேறு மொழிகளின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களை நூலகத்தில் வாங்கி வைக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார். அடுத்த மாதம் எங்கள் சங்கத்தின் பவள விழாவை ஒரு வாரம் வரை கொண்டாட திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

ஆளுநர் வருகையின் போது, டெல்லி சங்க நிர்வாகிகளான பொதுச் செயலாளர் என்.கண்ணன், இணைச் செயலாளர் ஆ.வெங்கடேசன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஆளுநர் ரவிக்கு, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். முகுந்தனிடமும், ஆளுநர் ரவி தமிழர்கள் வளர்ச்சித் தொடர்பான சில ஆலோசனைகளை அளித்து சென்றார். இவரிடம் தமிழ் மொழி யையும், தமிழ் கலாச்சாரத்தையும் டெல்லி வாழ் தமிழர்களுக்கு கொண்டு செல்லும் பணியினை தொடர்ந்து செய்யுமாறு ஆளுநர் ரவி வலியுறுத்தினார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் முகுந்தன் கூறும்போது, "இன்று தமிழக ஆளுநர் வந்தது போல் தமிழக முதலமைச்சராக இருந்த போது மு.கருணாநிதி சங்கத்துக்கு 3 முறை வந்துள்ளார். குடியரசு தலைவராக இருந்த போது ஏ.பி.ஜே.அப்துல் கலாமும் வருகை புரிந்துள்ளார். துணைப் பிரதமராக இருந்த போது எல்.கே.அத்வானி மற்றும் மத்திய அமைச்சராக இருந்த போது பிரணாப் முகர்ஜி ஆகியோரும் நேரில் வருகை தந்து டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x