அசாமில் ‘ரிமோட் கன்ட்ரோல்’ அரசு தேவையா? - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

அசாமில் ‘ரிமோட் கன்ட்ரோல்’ அரசு தேவையா? -  பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
Updated on
1 min read

மத்தியில் ஆட்சியில் இருந்த ‘ரிமோட் கன்ட்ரோல்’ அரசால் நமது நாடு பல்வேறு இழப்புகளைச் சந்தித்துள்ளது. அதுபோன்ற அரசு அசாமுக்கு தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ரஹா பகுதியில் நேற்று அவர் பேசியதாவது:

கடந்த காங்கிரஸ் அரசில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரளவுக்கு மட்டுமே பிரதமராக இருந்தார். அவரை வேறு சிலர் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கினர். அதுபோன்ற நிலையற்ற அரசு அசாமில் அமைய வேண்டுமா?

மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கக்கூடாது என்று சிலர் விரும்புகிறார்கள். இதன்மூலம் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பது அவர்களது கனவு.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்பட்டது. அந்த ஆட்சியில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் அண்மையில் 2 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதேபோல 2ஜி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்குகளில் குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம்.

அசாமில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் பெருகியுள்ளன. இப்போதைய ஆட்சியாளர்கள் தங்களின் மகன், மகள்களின் நலன்கள் குறித்து மட்டுமே அக்கறைப்படுகிறார்கள். முதல்வர் தருண் கோகோய் தனது மகனின் நல்வாழ்வுக்காக மட்டுமே நேரத்தை செலவிட்டு வருகிறார். அதேநேரம் பாஜக, ஒட்டுமொத்த அசாம் மக்களின் நலன்கள் குறித்துச் சிந்திக்கிறது.

சாரதா சிட்பண்ட் முறைகேடுகளால் அசாம் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம், மேற்குவங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் பணத்தேவையுள்ள ஏழைகள் சிட்பண்ட் நிறுவனங்களை தேடிச் சென்று தங்கள் உடைமை களை இழக்கிறார்கள். இதை தடுக்க ஜன் தன் யோஜ்னா வங்கிக் கணக்கு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அவர்களுக்கு உதவ அரசு வங்கிகள் தயாராக உள்ளன.

அசாமில் கடந்த 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் பெரும் பின்னடைவைச் சந்தித் திருக்கிறது. எனவே இந்த முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in