Last Updated : 10 Apr, 2016 09:59 AM

 

Published : 10 Apr 2016 09:59 AM
Last Updated : 10 Apr 2016 09:59 AM

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் வருத்தம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவ்வழக் கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் 20-க்கும் மேற்பட்ட அதிமுக வழக்கறிஞர்கள் வக்காலத்தில் கையெழுத்திடுகின்றனர். சென்னையில் தொடங்கிய சொத்துக் குவிப்பு பெங்களூ ருவுக்கு மாற்றப்பட்டபோது, இந்த வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வந்தனர்.

ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போதும், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்ற போதும் தினமும் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குவிவார்கள். டெல்லியில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர்களின் படையெ டுப்பால் உச்ச நீதிமன்றமே திணறியது அப்போதைய தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து,

“எதற்காக இத்தனை வழக்கறிஞர்கள் வந்துள்ளீர்கள், ஓரிருவர்தானே வாதிட போகிறீர்கள்? '' என்றார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையிலும் அதிமுக வழக்கறிஞர்களின் அணி வகுப்பால் நீதிமன்றம் திக்குமுக் காடியது. ஆனால் கடந்த வார விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறி ஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. இதுகுறித்து கேட்ட போது, ‘‘இந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் நவனீத கிருஷ்ணன், பன்னீர் செல்வம், பரணி குமார், திவாகரன், செல்வகுமார், தனஞ்செயன், கருப்பையா, அம்பிகை தாஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினர்.

இதேபோல நீதிமன்றத்துக்கு நாள்தோறும் வந்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, பூசாரி சேகர் உள்ளிட்ட சிலரும் விருப்ப மனு தாக்கல் செய்தனர். இவர்கள் தங்களுக்காக மட்டுமில்லாமல், தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் எனவும் பணம் கட்டினர். ஆனால் ஒருவருக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர்'’ என்றனர்

20 ஆண்டு உழைப்பு

இது தொடர்பாக ஜெயலலி தாவின் வ‌ழ‌க்கறிஞர்களிடம் பேசிய போது,

“1996-ம் ஆண்டு தொடுக்கப் பட்ட இந்த வழக்கு சென்னையில் நடைபெற்றபோதில் இருந்து நீதிமன்றத்துக்கு வருகிறோம். 2004-ம் ஆண்டு இவ்வழக்கு பெங்களூ ருவுக்கு மாற்றப்பட்டபோது, நாங்களும் பெங்களூரு நீதிமன்றத் துக்கு சென்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடும் பத்தை மறந்து, பிள்ளைகளை மறந்து ஜெயலலிதாவின் விடுத லைக்காக உழைத்திருக்கிறோம்.

நோய் தாக்குதல்

மொழி தெரியாத பெங்களூ ருவில் தங்கி மூன்று வேளையும் ஹோட்டல் உணவு சாப்பிட்டோம். இதனால் பல மூத்த வழக்கறிஞர்களுக்கு அல்சர், ரத்த கொதிப்பு, தீராத சளி, இருமல், நீரிழிவு போன்ற நோய்கள்கூட தாக்கியது . எல்லாவற்றையும் ஜெயலலிதாவுக்காக தாங்கிக் கொண்டோம். இறுதியில் நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவித்தபோது, குழந்தையைப் போல கதறி அழுதோம்.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இரவு பகலாக நிம்மதியின்றி தவித்தோம். இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகும் வரை தாடி, தலைமுடியை வளர்த்தோம். செருப்பு போடாமல் திருப்பதிக்கும் சபரிமலைக்கும் மாலைப்போட்டு ஓயாமல் வேண்டினோம். அதன் பலனாக கடந்த மே மாதம் ஜெயலலிதா நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.

காத்திருக்கிறோம்

இவ்வழக்கில் ஜெயலலிதா வுக்காக சில ஆண்டுகள் ஆஜராகிய வழக்கறிஞர் நவனீத கிருஷ்ணனுக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், அட்வகேட் ஜெனரல், டிஎன்பிசி தலைவர், ராஜ்யசபா எம்பி உள்ளிட்ட‌ பதவிகளை வழங்கினார். விடுதலை பெற்று தந்த பிறகு ஜெயலலிதா எங்களை அழைத்து பாராட்டுவார் என மிகவும் எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த ஓராண்டு ஆகியும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் ஏதேனும் பொறுப்புகள் கிடைக்கும் என காத்திருந்தோம். அதுவும் வழங்கப் பட‌வில்லை. எங்கள் பேரைச் சொல்லி சிலர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் களாகிவிட்டனர்.

மனம் உடைந்தது

இந்நிலையில் இறுதியாக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எங்களது தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு விருப்ப மனு தாக்கல் செய்தோம். இருபது ஆண்டுகளாக இந்த வழக்கில் உழைத்ததற்காக கண்டிப்பாக ஜெயலலிதா எங்களுக்கு வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த முறையும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் மனம் உடைந்து போயிருக்கிறோம். இருப்பினும் வழக்கிலும் தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்காக உயிர் இருக்கும்வரை போராடுவோம். பதவி கூட எங்களுக்கு வேண்டாம். ஜெயலலிதாவின் பார்வை எங்கள் மீது திரும்பினால் போதும்''என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x