பொறியியல் கல்லூரிகள் தர வரிசைப் பட்டியலில் சுயாட்சி கல்லூரிகளை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொறியியல் கல்லூரிகள் தர வரிசைப் பட்டியலில் சுயாட்சி கல்லூரிகளை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் சுயாட்சி கல்லூரிகளை நீக்கி வைக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்று சுயாட்சி அதிகாரத்துடன் இயங்கி வரும் 29 கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கும் சேர்த்து அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் தேர்ச்சி சதவீத அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இதை எதிர்த்து கோவை அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

சுயாட்சி கல்லூரிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.கங்குலி, ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகமே கேள்வித்தாள்களை தயாரித்து தேர்வுகளை நடத்தி விடைத்தாள்களைத் திருத்தி முடிவுகளை அறிவிக்கிறது. ஆனால் சுயாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் தாங்களே கேள்வித்தாள்களை தயாரித்து மதிப்பீடு செய்கின்றன.

இந்த இரண்டு பிரிவுகளை ஒன்றாகக் கருதி தேர்ச்சி அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் வெளியிடுவது நியாயமற்றது. அத்தகைய தர வரிசை, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடும்’ என்று வாதிட்டார்.

சுயாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளை தர வரிசைப் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in