Last Updated : 02 Mar, 2022 06:39 AM

 

Published : 02 Mar 2022 06:39 AM
Last Updated : 02 Mar 2022 06:39 AM

உக்ரைனில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் குடும்பத்தினருக்கு மோடி ஆறுதல்

பெங்களூரு: உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் நவீன் (21) உயிரிழந்ததை இந்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய அதிகாரிகள் ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்தவர். சேகரப்பா கவுடர் என்பவரின் மகனான இவர் அங்குள்ள கார்கிவ் தேசிய மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்துள்ளார். நேற்று காலையில் கார்கிவ் நகரில் உள்ள கடைக்கு உணவு வாங்க சென்ற அவர் வான்வெளி தாக்குதலில் சிக்கியுள்ளார். அவரது செல்போன் மூலம் நவீனின் இந்திய நண்பருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உயரிழந்த மாணவரின் தந்தை சேகரப்பா கவுடருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது மாணவரின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பசவராஜ் பொம்மை நவீனின் தந்தை சேகரப்பாவிடம் தொலைபேசியில் பேசும்போது, ‘‘இந்த மரணம் மிகவும் துரதிஷ்டவசமானது. தைரியமாக இருங்கள். உங்களது மகனின் உடலை இந்தியா கொண்டுவரும் பணியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. உங்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை கர்நாடக அரசு வழங்கும்'' என்றார்.

சேகரப்பா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இங்குள்ள மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதால் 3 ஆண்டுகளுக்கு முன்பு மகனை உக்ரைனுக்கு படிக்க அனுப்பினேன். தினமும் 3 முறை தொலைபேசியில் எங்களுடன் பேசுவார். போர் தொடங்கியதும் இந்தியா வருவதற்கு முயற்சி செய்தார்.

நாங்களும் அரசிடம் அவரை அழைத்துவருமாறு கோரிக்கை விடுத்தோம். இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் நவீன் உயிரிழந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது'' என சோகத்தோடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x