

ஹைதராபாத்: தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மாநில விவகாரங்களை தனது மகனும், தெலங்கானா மாநில ஐடி துறை அமைச்சருமான கே.டி. ராமாராவிற்கு வழங்கிவிட்டு, இவர் தேசிய அரசியலில் காலடி பதிக்க திட்டமிட்டுள்ளார். சந்திரசேகர ராவ், ஏற்கனவே கட்சி நிர்வாகத்தையும் தனது மகனிடம் ஒப்படைத்து விட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. மேலும், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் பாஜக கவுன்சிலர்கள் 46 பேர் வெற்றி பெற்று டிஆர் எஸ் கட்சியை அதிர்ச்சியடைய செய்தனர். இதனால், பாஜகவை தீவிரமாக எதிர்க்க முடிவு செய்துள்ள சந்திரசேகர ராவ், தற்போது திடீரென பாஜகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிஉள்ளார். காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் முதல்வர்களிடம் நட்புடன் பழகி வருகிறார்.இவர்களை ஒன்று சேர்த்து பாஜகவிற்கு எதிராக வரும் நாடாளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கி, 3வது அணி ஆட்சி மத்தியில் அமைய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், ஆளுநர் பதவி என்பதே மாநிலத்திற்கு தேவையில்லை என கூறி வரும் சந்திரசேகர ராவுக்கும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. மேடாரம் ஜாத்திரை விழாவிலும் ஆளுநருக்கு கொடுக்கும் மரியாதை தொடர்பாக விவாதம் எழுந்தது. மேலும், குடியரசு தின விழா ராஜ்பவனில் நடந்தபோது, விழாவில் தெலங்கானா அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தை ஆளுநரின் உரை இல்லாமலேயே நடத்துவது எனும் முடிவைசந்திரசேகர ராவ் எடுத்துள்ளார்.
வரும் 7-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மேலவை என இரு அவைகளிலும் ஆளுநரின் உரை இல்லாமலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால், கடந்த அக்டோபரில் நடந்த கூட்டத்தொடர் பாதியிலே முடிந்து போனதால், அதன் தொடர்ச்சிதான் தற்போது நடைபெற உள்ளது என்றும், அதனால், இதற்கு ஆளுநர் வர தேவையில்லை எனவும் தெலங்கானா அரசு சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது வேண்டுமென்றே செய்யும் செயல் என்றும், பாஜக மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை சந்திரசேகர ராவ் ஆளுநர் மீது காண்பிக்கிறார் என தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குற்றம் சாட்டியுள்ளார்.