200 கி.மீ. தொலைவை 100 நிமிடங்களில் கடக்கும் அதிவேக ரயில் சேவை தொடக்கம்

200 கி.மீ. தொலைவை 100 நிமிடங்களில் கடக்கும் அதிவேக ரயில் சேவை தொடக்கம்
Updated on
1 min read

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக கதிமன் ரயில்சேவை தொடங்கியது.

நிஜாமுதீன் - ஆக்ரா கதிமன் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் இந்த செமி புல்லட் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில், டெல்லி-ஆக்ரா இடையேயான 200 கி.மீ. தொலைவை 100 நிமிடங்களில் கடக்கும்.

இந்த ரயிலில் பணிப்பெண்கள் இருப்பர். ரோஜா பூவுடன் வரவேற்கும் அவர்கள் பயணிகள் தங்களின் இருக்கைக்கு சென்று அமர உதவுவர். வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள் பொருத்தப்பட்டு, இலவச இணையதள சேவை இந்த ரயிலில் வழங்கப்படும். இதன் மூலம் திரைப்படம், செய்தி, கார்ட்டூன்கள் போன்ற வசதிகளை பயணிகள் அனுபவிக்க முடியும். தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில், இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது

நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் சுரேஷ் பிரபு பேசும்போது, “முதல் செமி –புல்லட் ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் என எந்த ரயிலாக இருப்பினும் அவற்றின் வேகத்தை அதிகரிக்க விரும்புகிறோம். இது எளிதான பணி அல்ல. சிறிது காலம் தேவைப்படும். ஆனால், நாங்கள் திட்டம் வகுத்துள்ளோம்” என்றார்.

நீலம் மற்றும் சாம்பல் வண்ணக் கலவையும், இடையில் மஞ்சள் வண்ண பட்டையும் இந்த ரயிலில் அடிக்கப்பட்டுள்ளது.

5,500 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் இந்த ரயிலை இழுத்துச் செல்லும். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் பயணிகளுக்கு தகவல் தரும் முறை, பக்கவாட்டில் திறக்கும் கதவுகள், அகன்ற ஜன்னல்கள், பயோ-டாய்லெட்டுகள், இலவச இணைய சேவை, பெட்டிகளில் சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்கள் என பல்வேறு அம்சங்கள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன.

ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.750, எக்ஸிகியூட்டிவ் ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.1,500 கட்டணமாக உள்ளது. இதே வகுப்புகளுக்கு சதாப்தி ரயிலில் முறையே ரூ.540 மற்றும் ரூ.1040 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கதிமன் ரயிலில் எந்தப் பிரிவினருக்கும் கட்டண சலுகை இல்லை.

வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும். கான்பூர்-டெல்லி, சண்டீகர்-டெல்லி, ஹைதராபாத்-சென்னை, நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா-மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் இடையே இதேபோன்ற செமி-புல்லட் ரயில்சேவை தொடங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in