

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் இஸ்பாட் நிறுவனம், அதன் 2 இயக்குநர்களுக்கான தண்டனை விவரம் வரும் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ சார்பில் தொடரப்பட் டுள்ள வழக்குகள் அனைத்தையும் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதி பரத் பராசர் விசாரித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள வடக்கு தாது நிலக்கரி சுரங்கத்தை, ஜார்க்கண்ட் இஸ்பாட் நிறுவனத் துக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக 2013-ல் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. போலியான மற்றும் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றதாக இஸ்பாட் நிறுவனம், அதன் 2 இயக்குநர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஜார்க்கண்ட் இஸ்பாட் நிறுவனம், அதன் இயக்குநர்களான ஆர்.எஸ்.ருங்தா மற்றும் ஆர்.சி.ருங்தா ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி பரத் பராசர் மார்ச் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இவர்கள் மீதான தண்டனை குறித்த வாதம் 31-ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இதன்படி, குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து நேற்று வாதம் நடைபெற்றது. அப்போது, “திட்டமிட்டு, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள ஜார்க்கண்ட் இஸ்பாட் நிறுவனம், அதன் 2 இயக்குநர்களுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, “தங்கள் கட்சிக்காரர்கள் எந்த சதிச் செயலிலும் ஈடுபடவில்லை. மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கத் தில் நிலக்கரி எடுக்காததால் ரூ.200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத் பராசர், தண்டனை விவரம் வரும் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்தார்.