வேகமெடுக்கும் உக்ரைன் மீட்பு பணி: களமிறங்கும் விமானப்படை?- பிரதமர் மோடி ஆலோசனை

வேகமெடுக்கும் உக்ரைன் மீட்பு பணி: களமிறங்கும் விமானப்படை?- பிரதமர் மோடி ஆலோசனை
Updated on
2 min read

புதுடெல்லி: உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களை விரைவாக அழைத்து வருவதற்காக விமானப்படை விரைவில் களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா' என பெயரிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களை விரைவாக அழைத்து வர விமானப்படையின் உதவி நாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படையின் ஐஏஎப் சி-17 விமானம் 336 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. இந்த விமானம் மூலமே ஆப்கானிஸ்தானில் போர் நடந்தபோது அங்கிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிகமான மக்களை வெளியேற்றுவதை உறுதி செய்ய முடியும். இது மனிதாபிமான உதவிகளை மிகவும்க வேகமாக செயல்படுத்த வாய்ப்பாக அமையும். இந்திய விமானப்படை விமானங்கள் இன்றே பணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்பு பணியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
மீட்பு பணியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, மாணவர்கள் மீட்பு பணி குறித்து பிரதமர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

அத்துடன் விமானப்படையை மீட்பு பணியில் பயன்படுத்துவது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் விளக்கியதாகவும் கூறப்படுகிறது. முப்படைகளின் தளபதியாக குடியரசுத் தலைவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in