

ரயில் கட்டணம் உயரும் என மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா சூசகமாக தெரிவித்தார்.
சனிக்கிழமை பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த சதானந்த கவுடா கூறியதாவது:
வரும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளேன். இதில் நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் இருக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோ சனையை முடித்துள்ளேன். ரயில்களில் பயணக் கட்டணத்தை உயர்த்தினால்தான் ரயில்வே துறையில் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இது தொடர்பாக ஊடகங்கள் மக்களிடம் தேவை யில்லாத கலக்கத்தை ஏற்படுத்தக் கூடாது.
ரயில் கட்டணத்தை உயர்த்தி னால்தானே ரயில்வே துறையின் சார்பாக பயணிகளுக்கு தரமான, பாதுகாப்பான சேவையை வழங்க முடியும். எனவே ரயில் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதுபற்றிய இறுதி முடிவை ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
எனது சொந்த ஊரான மங்களூரில் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை களையும், ரயில்வே துறை சார்பாக கர்நாடக மக்களின் அனைத்து கனவு திட்டங்களையும் 3 ஆண்டு களுக்குள் நிறைவேற்றுவேன். இவ்வாறு சதானந்தா கூறினார்.