Published : 28 Feb 2022 08:13 PM
Last Updated : 28 Feb 2022 08:13 PM

ரஷ்யா - உக்ரைன் போர்: 'படையெடுப்பு' வார்த்தையை தவிர்த்த காங்கிரஸ்; உரக்கச் சொன்ன சசிதரூர்

புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டுவிதமான நிலைப்பாடுகள் வெளிப்பட்டுள்ளது விவாதத்துக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

உக்ரைனில் இருந்து போலந்துக்கு செல்லும் இந்தியர்கள் சிலர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உக்ரைனில் இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், இந்தக் காணொளிகளைப் பார்க்கும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் என் மனம் நோகிறது. எந்தப் பெற்றோருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் திட்டத்தை வெளிப்படையாக மத்திய அரசு அவர்களது குடும்பத்தினருடன் அவசரமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். சொந்த மக்களை நாம் கைவிட முடியாது" என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி அரசாங்கத்தை வலியுறுத்திய நேரத்தில், காங்கிரஸ் சார்பில் போர் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா வெளியிட்ட அந்த அறிக்கையில், "மின்ஸ்க் மற்றும் ரஷ்யா-நேட்டோ ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய புரிந்துணர்வுகளுக்கு மதிப்பளித்து, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கான வழியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான போர், உலக அளவில் கவலைக்குரிய விஷயம். ஆயுத மோதலை நிறுத்துவதற்கும், மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா விலகிய பின்னர் இதேபோன்றொரு விளக்கத்தை தான் இந்திய அரசும் கொடுத்தது. அதே வார்த்தைகளை தனது அறிக்கைகளில் பயன்படுத்திய காங்கிரஸ், குறிப்பாக ரஷ்யா செய்ததை ’படையெடுப்பு’ என்று குறிப்பிடுவதை தவிர்த்தது. காங்கிரஸின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக இதைக் கருதும் வேளையில், மற்றொரு முன்னாள் அமைச்சர் சசி தரூர், வேறு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவர் தனது கருத்தில், உக்ரைன் போரை ரஷ்யாவின் ’படையெடுப்பு’ என்றே குறிப்பிட்டு வருகிறார்.

ஊடகம் ஒன்றில் சசி தரூர் எழுதிய கட்டுரையில், "நாங்கள் எங்கள் கொள்கைகளை விட ரஷ்யாவுடனான 'நட்பை' முன்னிறுத்தப் போகிறோம். ஆனால், நண்பர்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாகப் பேச முடியாவிட்டால், நட்பின் மதிப்பு என்ன?. ரஷ்யா செய்தது படையெடுப்புதான். படையெடுப்பை படையெடுப்பு என்று தானே சொல்ல முடியும். சர்வதேச எல்லையில் ரஷ்ய பீரங்கிகள் சென்று கொண்டிருக்கும்போது, ​​உக்ரைன் நகரங்கள் பலவற்றில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தபோது, ​​ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, படையெடுப்புக்கு எதிரான தீர்மானத்தில் ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிடவில்லை, அந்த நாட்டை விமர்சிக்கக்கூட இல்லை. ரஷ்யாவின் படையெடுப்பு சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது என்பது உலகறிந்த உண்மை. ஆனால், இதில் ஐ.நா. அமைப்பில் அதற்கு எதிராக வாக்களிக்காமல், இந்தியா தன்னை 'வரலாற்றின் தவறான பக்கத்தில்' நிறுத்திவிட்டதாக பலர் வருந்தி வருகின்றனர்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி, காங்கிரஸ் கட்சி இரண்டு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி இருந்தது விவாதமாக மாறியது. ஆனால், வெளியுறவு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் சார்பில் கருத்து தெரிவிக்கும் ஆனந்த் சர்மா, "சசி தரூரின் கருத்துக்கள் தனிப்பட்டவை. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ கருத்து கிடையாது" என்று கூறியதுடன், "இந்த விவகாரத்தில் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரட்டை நிலைப்பாடு வலைதளங்களில் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x