Published : 28 Feb 2022 07:06 AM
Last Updated : 28 Feb 2022 07:06 AM

டெல்லியில் இந்திய மாணவர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

உக்ரைனிலிருந்து வெளியேறி ருமேனியாவில் தங்கியிருந்த இந்தியர் 250 பேர் நேற்று அதிகாலை ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்திறங்கினர். அவர்களை மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் ஆகியோர் வரவேற்றனர். படம்: பிடிஐ

புதுடெல்லி

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கிருக்கும் இந்தியர்கள், இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசுசிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி விமானங்களில் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், ருமேனியால் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் 2-வது விமானம் நேற்றுஅதிகாலை டெல்லி வந்து சேர்ந்தது. அப்போது விமானத்துக்குள் சென்ற மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை வரவேற்றார். அப்போது அவர்களிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசியதாவது:

உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பியுள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். உங்களைப் பாதுகாப்புடன் அழைத்து வருவோம் என மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி துரித நடவடிக்கைகளை எடுத்தார்.

அதன் பலனாக இன்று நீங்கள்பத்திரமாக தாய்நாடு திரும்பியுள்ளீர்கள். நீங்கள் அங்கு மிகவும் கஷ்டமான கால கட்டத்தில் இருந்திருப்பீர்கள். ஆனால் பிரதமர் மோடி உங்களுடன் இருக்கிறார். மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. 140 கோடி இந்தியர்கள் உங்களுடன் இருக்கிறார்கள். எனவே கவலை வேண்டாம்.

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் நிச்சயம் மீட்கப்படுவர். அவர்கள் அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே இந்தத் தகவலை உங்களுடைய உறவினர்களுக்கும், உக்ரைனில்இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும், உடன் பணி புரிபவர்களுக்கும், அனுப்புங்கள். இந்தியர்களை மீட்பது தொடர்பாக ரஷ்ய அரசுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே, யாரும் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x