

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதேபோல, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களின் விவரங்களை தமிழக அரசு சேகரித்து வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் மருத்துவம் படிக்கச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
எதற்காக இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டுக்குச் சென்றனர் என்று பலரிடமும் கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
இந்தியாவில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்களுக்கு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களே கடைசி வாய்ப்பாக உள்ளன.
ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டில் படித்து முடிக்க ரூ.1 கோடிக்கும் அதிகமாக செலவாகும். அதனால், குறைவான கட்டணத்தில் மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா, உக்ரைன், ஜார்ஜியா, அர்மீனியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்த நாடுகளில் ரூ.27 லட்சம் முதல் ரூ.40 லட்சத்துக்குள் மருத்துவம் படித்து முடிக்க முடியும். இருப்பதிலேயே உக்ரைனில்தான் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 3,500-ல் இருந்து 5 ஆயிரம் பேர் வரை சென்று படிக்கின்றனர். நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உக்ரைனில் போர் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்பாகவே, அங்குள்ள இந்திய தூதரகம் மாணவர்களை வெளியேறும்படி அறிவித்திருந்தது. சுமார் 2,500 மாணவர்கள் இந்தியா திரும்பிவிட்டனர். தமிழகத்துக்கு 500 மாணவர்கள் வந்துள்ளனர்.
படிப்பை முடித்துவிட்டுச் சென்றுவிடலாம் எனக் கருதி, மருத்துவம் கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். விமானங்கள் கிடைக்காததால் ஏராளமான மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போதைய நிலையில் 18,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்களில் தமிழக மாணவர்கள் 2 ஆயிரம் பேர். இந்திய மாணவர்கள் மீட்க மத்தியஅரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக மாணவர்களின் பயணச் செலவு கட்டணத்தை ஏற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் இயக்குநர் முகமது கனி கூறும்போது, "உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு, தேவையான உதவிகளைப் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து பாதுகாப்பான மேற்குப் பகுதிக்குச் செல்ல இந்தியர்களுக்கு இலவச ரயில் சேவை வசதியை, அங்குள்ள இந்திய தூதரம் செய்துள்ளது.
பாதுகாப்பான பகுதிக்குச் சென்ற பின்னர், அங்கிருந்து இந்தியா திரும்பும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபடலாம். இந்நிலையில், மாணவர்கள் அனைவரும் இந்தியா திரும்பிய பின்னர் அவர்கள் படிப்பு என்னவாகும் என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
போர் முடிவுக்கு வந்தபின் உக்ரைன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஓராண்டுக்கு மேலாகும். மீதமுள்ள படிப்பை முடிக்க உக்ரைனுக்கு மீண்டும் மாணவர்களை அனுப்ப பெற்றோரிடம் அச்சம் இருக்கும். 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இருப்பதால், இங்கு மற்ற படிப்புகளைப் படிக்கவும் சிக்கல் ஏற்படும்.
மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெற்று உக்ரைன்சென்றிருப்பதால், கூடுதல்வட்டி செலுத்த வேண்டியிருக்கும். படிப்பை பாதியிலேயே நிறுத்தினாலும், கட்டிய பணத்தை அங்குள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து வாங்கமுடியாது. எனவே, மாணவர்களின் படிப்பும், பணமும் வீணாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.