நம் மருந்து உற்பத்தித் துறையைக் குணப்படுத்தப் போவது யார்?

நம் மருந்து உற்பத்தித் துறையைக் குணப்படுத்தப் போவது யார்?
Updated on
4 min read

தரமற்ற மருந்துகள் உற்பத்தியையும், விற்பனையையும் தடுக்கப்போவது யார் என்று அந்தத் துறை சார்ந்த நிபுணர் தினேஷ் தாக்கூர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய மருந்துக் கட்டுபாட்டு அமைப்பில், செயல்பாடுகளில் அவசரமாகத் தேவைப்படும் அவசியச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி நான் மார்ச் 11-ம் தேதி தொடர்ந்த இரண்டு பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த 2 பொதுநல மனுக்களுமே எனது சொந்த முயற்சியில் நான் என் சொந்த செலவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் கடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

ரான்பாக்ஸி மருந்து உற்பத்தி நிறுவன வழக்கு விவகாரத்தில் நான் அந்நிறுவனத்தின் தரவு ஜோடிப்பு உட்பட பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியவன் என்ற முறையில் எனக்கு இந்த மருந்து உற்பத்திச் சந்தைகளின் சீர்திருத்தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் உத்வேகம் பிறந்தது.

நான் இதனால் ரான்பாக்ஸி நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்து நிறுவனத்தின் விதிமீறல்களை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு கழகத்திற்கு புகாராக அளித்தேன். இதனையடுத்து ரான்பாக்ஸிக்கு யு.எஸ்.எஃப்.டி.ஏ. 500 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது. மேலும் முக்கியமாக, அமெரிக்க உணவு மருந்துக் கழகம் உட்பட பல அயல்நாட்டு மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளும் ரான்பாக்ஸியின் உற்பத்தி முறைகளை தோண்டித் துருவ ஆரம்பித்தன.

இதனால் இந்திய மருந்து உற்பத்தி, விற்பனைத் துறைகளில் தரம் குறித்த அதீத கவனம் உருவானது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக தரத்தை உயர்த்துவது பற்றிய ஒட்டுமொத்த கவனமும் பணம் கொழிக்கும் மேற்கத்திய சந்தைகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் உற்பத்தித் தொழிற்சாலைகளிலேயே இருந்து வருகிறதே தவிர, இந்தியாவில் மருந்துகளை தயாரிக்கும், விற்கும் நிறுவனங்களின் தரநிலைகளைப் பற்றி கவனம் பெறவில்லை. இதற்கு அந்தத் தொழிற்துறையும் ஒன்றும் செய்யவில்லை, அரசும் ஒன்றும் செய்யவில்லை. இதனால் நம் ஆசியக் கண்டத்தின் அண்டை நாடுகளும், ஆப்பிரிக்காவும் கூட பாதிப்படைந்துள்ளன.

தரமற்ற மருந்துகளின் எதிர்மறை விளைவுகள்:

இந்தியாவின் அயல்நாட்டு குடிமகனாக, தரமற்ற மருந்துகளினால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு ஆரோக்கியக் குறைபாடு ஏற்படுவது என்னுள் எச்சரிக்கை மணியை ஒலித்தன. தரமற்ற மருந்துத் தயாரிப்புகளினால் ஆன்ட்டி-பயாடிக் மருந்துகளுக்கான தடுப்பு சக்தி பெருகியதோடு, மக்கள் பணம் விரயம் செய்யப்பட்டு வருகிறது. நான் முதலில் இந்த விவகாரங்களை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முயன்றேன். 2014-ம் ஆண்டு அப்போதைய மத்திய சுகாதார அமைச்சரை என்னால் சந்திக்க முடிந்தது. ஆனால் அவருக்கு நான் கூறும் இந்த விவகாரம் குறித்து எந்தவித ஆர்வமும் இல்லை. பிறகு நான் சுகாதார அமைச்சகத் துறையின் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து சீர்திருத்தத் தேவைகளின் அவசரத்தை வலியுறுத்த 2 ஆண்டுகள் போராடினேன்.

ஆனால் இவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான பதிலையே எனக்கு அளித்தனர், அதாவது பொதுநல மனு மூலம் உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு எனக்கு அறிவுறுத்தினர். மேலும், இந்திய மருத்துவத் துறை, மருந்து உற்பத்தித் துறை மிகவும் சக்தி வாய்ந்தது, என்றும் அரசு முயன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை இவர்கள் தங்கள் செல்வாக்கினால் முடக்கினர் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர். இதன் விளைவாக, எனவே நான் எனது சக்தி அனைத்தையும் வழக்கறிஞர்கள் அணியுடன் செயல்பட்டு இந்த மாதத்தின் துவக்கத்தில் விசாரணைக்கு வந்த பொதுநல மனுக்களுக்கான அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்த செலவிட்டேன்.

இது மிகுந்த கடினமான, செலவுமிக்க, காலம் நீடிக்கும் நடைமுறையாகும். இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு சட்டகம் குறித்து ஆய்வு செய்யும் கல்விப்புல வட்டாரங்களோ, சிந்தனையாளர்களோ, ஆர்வலர்களோ இல்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நாங்கள் மிகப்பெரிய ஆய்வில் ஈடுபட்டோம். இதில் நாங்கள் எண்ணற்ற அரசு அறிக்கைகளை வாசித்தோம், 125க்கும் அதிகமான தகவலுரிமை விண்ணப்பங்களை மேற்கொண்டோம். அதாவது பல்வேறு மாநிலங்களின் மருந்துக் கட்டுப்பாட்டு துறையினரிடமிருந்து தகவல்களை திரட்டினோம். அதாவது மருந்துகள் மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டம் 1940 எந்தந்த விதங்களில் அமலாக்கம் செய்யப்பட்டன என்று தகவல்கள் திரட்டினோம்.

இதில் நாங்கள் கண்டுபிடித்தது பெரிய எச்சரிக்கை மணியாக இருந்தது, நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான சூழ்நிலைகள் இருப்பது தெரிய வந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாட்டின் தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) தொடர்ந்து வெளியிட்ட அறிக்கைகளின் படி மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் உட்பட பொது நிதி ஆதாரங்களுடன் நடத்தப்படும் சுகாதாரத் திட்டங்களில் கூட தரமற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டது தெரிய வந்தது. ரயில்வே மருத்துவமனைகள், இந்திய ராணுவப் படையினரின் மருந்து ஸ்டோர்கள், என்று தரமற்ற மருந்துகள் பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்தடுத்து வெளிவந்த சிஏஜி அறிக்கைகள் சுட்டிக் காட்டின. குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் ராணுவ மருந்து விற்பனை ஸ்டோர்களில் ஒரே ஆண்டில் 32% மருந்துகள் உள்ளூரில் வாங்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட தரமற்ற மருந்துகள் என்று சிஏஜி சுட்டிக்காட்டியதை கவனத்தில் கொண்டோம்.

ஐரோப்பிய மருந்து நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்று வருவதாக 2012-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது. எந்த ஒரு வளர்ந்த நாடும் இந்தப் பட்டியலிலிருந்து தப்பவில்லை. இது குறித்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ பொறுப்புடைமை அளித்தும் இது போன்ற சட்டவிரோத அனுமதிகளை வழங்கியது குறித்த விசாரணையை மேற்கொள்வதில் சுகாதார அமைச்சகம் தோல்வி அடைந்தது.

மேலும் டாக்டர் எம்.கடோச் 2012-ம் ஆண்டில் தலைமை வகித்த நிபுணர்கள் குழு, மற்றும் டாக்டர் ரஞ்சித் ராய் சவுத்ரி 2013-ம் ஆண்டில் தலைமை வகித்த கமிட்டி ஆகியவை அளித்த சீர்திருத்தப் பரிந்துரைகளும் புறக்கணிக்கப்பட்ட கதைகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. இதில் டாக்டர் ரஞ்சித் ராய் சவுத்ரி கமிட்டி கட்டாய அடிப்படை தர சோதனைகளைப் பரிந்துரை செய்திருந்தது. இதில் ஒரே மருந்துப் பொருளின் சந்தையில் உள்ள பிராண்ட் மற்றும் அதே மருந்தின் ஜானரிக் வடிவம் இரண்டுக்கும் ஆன தர நிலைகளை சோதிக்கும் பயோ-ஈக்விவேலன்ஸ் பரிசோதனைக்கு பரிந்துரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. (உதாரணமாக ஜெண்டா மைசின் என்ற ஆன்ட்டி-பயாடிக் கேராமைசின் என்ற வணிகப்பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இதன் ஜானரிக் வடிவமான ஜெண்டாமைசினையும் பல நிறுவனங்கள் இதே பெயரில் சந்தைப்படுத்தியுள்ளன. கேராமைசின் விலை உதாரணத்திற்கு ஒரு ஆம்பியூல் ரூ.8 அல்லது ரூ.9 என்றால், உதாரணமாக ஜானரிக் ஜெண்டாமைசின் விலை 3 ரூபாய்க்கு கிடைக்கும்). ஆனால் இந்தப் பரிந்துரையை மருந்து ஆலோசனை கமிட்டி ஏற்கவில்லை. காரணம் இந்தியாவில் இதற்கான உள்கட்டமைப்பு வசதி இல்லை என்று ஏற்கப்படவில்லை.

ஆனால் இதே மூச்சில் இத்தகைய பயோ-ஈக்விவேலன்ஸ் டெஸ்ட்களை அயல்நாட்டுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகளுக்கு செய்ய ஊக்குவித்தது. ஏனெனில் அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் பயோ-ஈக்விவேலன்ஸ் நிரூபிக்கப்படாத மருந்துகளை ஒரு போதும் அனுமதிப்பதில்லை என்பதே காரணம்.

நிபுணர்கள் குழுவின் இத்தகைய அவசியமான பரிந்துரைகளை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்ததே நாட்டின் ஏற்கெனவே பலவீனமான மருந்துக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளிலும் பிரதிபலித்தது. இந்நிலையில் தனிப்பட்ட முறையில் மாநிலங்களில் மருந்து ஆய்வாளர்கள் நடத்திய சோதனைகள் வெறும் கண் துடைப்பே, காரணம் பெரிய வலைப்பின்னல் இருக்கும் போது ஓரிரு தனிப்பட்ட சோதனைகளைச் செய்து வழக்குகளைப் போடுவது என்பது வெறும் கண் துடைப்புச் செயல்பாடே.

தரமற்ற மருந்து உற்பத்தியாளர்கள் எப்போதும் இமாச்சலப் பிரதேசத்திலோ, உத்தரகாண்டிலோ இருக்கின்றனர், தரமற்ற மருந்துகள் மகாராஷ்டிரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் விற்கப்பட்டு வருகின்றன. இதில் வெகுகுறைவாகவே சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். இந்த வழக்குகளிலும் கூட மோசடிக்கான அடிப்படை ஓராண்டு சிறைத் தண்டனையை நீதிபதிகள் புறக்கணித்தே வந்துள்ளனர். மாறாக குறைந்த தண்டனைகளையே நீதிபதிகள் தேர்ந்தெடுக்கின்றனர். லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே வருகின்றனர், இவர்களுக்கு அபராதமும் 5 இலக்கத் தொகை விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த நடைமுறைகளை நாங்கள் ஆய்வு செய்த வகையில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தத் தொழிற்துறை படுமோசமான நிலையில் உள்ளதாகவே எங்களுக்கு தெரிய வந்தது.

இதைவிடவும் கவலை அளிப்பது, பெரிய அளவில் திறமையுடைய மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் கூட இமாச்சலம் மற்றும் உத்தரகாண்டிலிருந்து வரும் தரமற்ற மருந்துகளின் விற்பனையை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே. தவறு செய்யும் உற்பத்தியாளர்களின் உரிமத்தை ரத்து செய்யும் உரிமை மாநில அரசுகளிடம் இருக்கிறது. ஆனால் 1955-ம் ஆண்டு முதல் தொடங்கிய நிபுணர்கள் குழு தொடர்ந்து உரிம விவகாரங்கள் மத்திய அரசின் வசம் இருக்க வேண்டும் என்று பரிந்துரை மேற்கொண்டது. இதனையடுத்து 2007 மற்றும் 2013ஆம் ஆண்டு உரிமங்களை மத்திய அரசு கையிலெடுத்துக் கொள்ளும் இரண்டு மசோதா முயற்சிகளை மருந்து உற்பத்தித் துறையினர் சதி செய்து முறியடித்தனர்.

இந்நிலையில் நான் செய்த இரண்டு பொதுநல மனுக்களே தூய்மையாக்கத்தின் துவக்கமாக அமையும் வாய்ப்பைக் கொடுக்கும். தற்போது பிக்சட் டோஸ் மருந்து சேர்க்கைகள் மீது விதிக்கப்பட்ட தடையை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் விதம் இந்த அமைப்பை சீர்திருத்துவது சாதாரணமான காரியமல்ல என்பதை நமக்கு தொடர்ந்து அறிவுறுத்தியே வருகிறது. கோர்ட்டில் இருக்கும் பிரச்சினை பெரிய அளவிலான பிரச்சினையின் ஒரு சிறிய பகுதியே. தற்போதைய இந்த நடைமுறையை அதிகார வர்க்கம், அதன் அதிகாரிகள், அரசியல்மட்டம் இணைந்து செயல்படுத்தியுள்ளது, அதற்கேற்றவாரு மருந்துக் கட்டுப்பாட்டு விதிகளில் ஏகப்பட்ட ஓட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நடக்கும் விஷயங்களை அளவுகோள்களுக்கு உட்படுத்தி விளக்க முடியவில்லை, அதைவிடவும் மிகப்பெரிய பிரச்சினை இது. நிரூபிக்க முடியாதது, ஆனால் இதனை ஆராய்ச்சி செய்வது ஏதோ அகாடமிக் விவகாரம் அல்ல. இந்த தரமற்ற மருந்துகள் வியாதியை குணப்படுத்த லாயக்கற்றவை என்பதோடு, ஆன்ட்டி-பயாடிக் வேலை செய்யாமல் தடுக்கவும் செய்கிறது, மேலும் புதிது புதிதாக புதிர் நோய்கள் உருவாவதற்கும் காரணமாக உள்ளன. இதன் நீண்டகால விளைவுகள் மனித ஆரோக்கியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக ஏழைகள், நலிவுற்றோர் ஆரோக்கியம் கடும் நெருக்கடிக்குள்ளாகும்.

நம் குடும்பம், நம் நண்பர்கள் நம் சக குடிமக்கள் ஆகியோர் இதனால் பாதிக்கப்படுவதை உணர்ந்து, இதனை எதிர்த்து நான் நீதிக்காக அரசிடம் போராடி வருகிறேன். துரதிர்ஷ்டவசமாக மரியாதைக்குரிய நீதிமன்றம் எனது மனுவை ஏற்க மறுத்துவிட்டது. நான் இப்போது இந்த பழுதடைந்த அமைப்பைச் சீர்திருத்த எங்கு செல்வது யாரை அணுகுவது?

தினேஷ் எஸ்.தாக்கூர் என்பவர் மெடாஸ்யூர் குளோபல் காம்ப்ளையன்ஸ் கார்ப்பரேஷனின் தலைமைச் செயல் அதிகாரி.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் கட்டுரை: தமிழில் - ஆர்.முத்துக்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in